இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Wednesday, February 23, 2011

உருத்திரபுரம் கிராம வரலாறு - திரு.கா.நாகலிங்கம்

0 கருத்துக்கள்
போருக்கு பின் இருந்த உருத்திரபுரத்தின் வீதியொன்று

நாற்றிசையும் கடலாற் சூழப்பட்ட இலங்கைத்தீவில் 'ஈழம்' என அழைக்கப்படும் தமிழரின் பாரம்பரிய தாயகத்தின் வடபால் யாழ்ப்பாணமாவட்டத்திற்குத் தெற்கிலும் கிழக்கே முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வவுனியா மாவட்டத்திற்கு வடக்கேயும் மன்னார் மாவட்டத்திற்கும் கடலுக்கும் கிழக்கிலும் இடைப்பட்ட மாவட்டமே கிளிநொச்சி மாவட்டமாகும்.

கிளிநொச்சி மாவட்டம் இயற்கை அன்னை உவந்தளித்த நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே அமைந்த விவசாய மாவட்டமாகும்.இலங்கையின் பாரிய குளங்களில் ஒன்றான இரணைமடுக்களம் இங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இக்குளத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் நீர்ப்பாய்ச்சப்பட்டு நெற்பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படுகின்றது.

இந்தியாவிற்கு தஞ்சை மாவட்டம் நெற்களஞ்சியமாகத் திகழ்வது போலக் கிளிநொச்சி மாவட்டமும் இலங்கைத்தீவில் நெற்களஞ்சியமாகத் திகழ்கின்றது.வடபகுதி மக்களுக்கு அதாவது யாழ்குடாநாட்டு மக்களுக்குச் சோறிடும் நெற்களஞ்சியமாக இம்மாவட்டம் திகழ்கின்றது.

1930ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களிற்கு முன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து கரைச்சிப் பிரிவின் சில பகுதிகளிற் குறிப்பாக முரசுமோட்டை ஊரியன் கண்டாவளை கலவட்டித்திடல் குஞ்சுப்பரந்தன் உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் மிகவும் நாகரீகம் மிகுந்த மிகப் பழமையான வதிவிடங்கள் அமைந்திருக்கின்றன.இவை இன்றும் 'பழைய கமம்' என்றே அழைக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் இலங்கையிற் 'கடலை' அண்டிய பகுதிகளிலேயே மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்.நீர்கொழும்பு முதல் மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு திருமலை மட்டக்களப்பு பொத்துவில் வரை தழிழர்களும் கதிர்காமம் அம்பாந்தோட்டை மாத்தறை காலி கொழும்பு வரை சிங்களவர்களும் வாழ்ந்து வந்ததாகப் பழங்காலச் சரித்திரங்கள் கூறுகின்றன.

பின்னர் இப்பகுதிகளின் அரசர்களிடையே ஏற்பட்ட இடம் பிடிக்கும் யுத்தம் காரணமாகவும் வெளிநாட்டவரின் வருகை காரணமாகவும் மக்கள் உள்பிரதேசங்களான அனுராதபுரம் பொலநறுவை கண்டி இரத்தினபுரி போன்ற பகுதிகளிற் தாம் மறைத்து வாழவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டிக் குடியேறினர்.இது போன்றே யாழ்ப்பாணகுடாநாட்டில் வசித்த மக்கள் குடாநாட்டின் எல்லைக் கடலைக் கடந்து அதன் கரைப்பகுதிகளிற் குடியேறிய காரணத்தால் அப்பகுதிகள் கரைச்சிப்பகுதியென அழைக்கப்படலாயிற்று.இக் கரைச்சிப்பகுதியில் அமைந்துள்ள ஆலயங்கள் மிகப்பழமையானவை.
உருத்திரபுரம் கிராமம் இக்கிராமங்கள் எல்லாவற்றுக்கும் மிகப்பழமையானது என்பதை பல சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இக்கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சிவபூமியாகும். இலங்கையில் பல சிவாலயங்கள் இருந்திருக்கின்றன. தேவார காலம் அதாவது நாயன்மார்கள் காலத்திலே அவர்களாற் பாடல் பெற்ற மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் திருகோணமலையிலுள்ள கோணேஸ்வர் பாடல் பெறாத சிலாபத்திலுள்ள முனீஸ்வரம் திருப்புகழ்காலக் கதிர்காமம் என்பன பழைய ஆலயங்கள் என்பது வரலாற்றுச் சான்று பகர்பவை. இவ்வாலயங்களின் காலத்திலும் முற்பட்ட சாலத்திலேயே உருத்திரபரம் உருவாகியிருப்பதாக அறிய முடிகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ ஒன்பது வீதியிற் காணப்படும் கறடிப்போக்குச்சந்தியில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் ரெயிலர் வீதியின் 3ஆம் மைல்கல்லில் இருந்து 7ம் மைல்கல் வரை வீதியின் இரு புறமும் உள்ள பகுதியே உருத்திரபுரம் ஆகும். இதன் மேற்க்குப்புற எல்லையிலே மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றுடன் அமைந்திருப்பதே 'உருத்திரபுரீஸ்வரம்' சிவாலயம் ஆகும்.இச் சிவாலயம் மிகப்பழமை வாய்ந்த ஆலயம் மட்டுமன்றிக் கிளிநொச்சியின் ஒரேஒரு சிவாலயம் என்ற பெருமையையும் பெற்றது.இங்கே 'மனோன்மணி அம்பாள்' சமேதரராகத் தக்கனின் யாகத்தை அழித்த உருத்திர மூர்த்தியான சிவன் சாந்தங்கொண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய சிறப்புக்களுடன் விளங்கிக்கொண்டிரக்கின்றார்.
 
வரலாற்றுப் பெருமையும் தொன்மையும்
தென் இந்தியாவிலுள்ள தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில் போல் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உருத்திரபுரீஸ்வரமும் கற்றளியும் ஒருகாலத்தில் சிறப்புப்பெற்று விளங்கியதற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.இதன் கிழக்குப்புறமாகவும் பழைய கட்டிடச்சான்றுகள் முறிப்புக்குளத்தின் தென்புறமாக அலை கரைப் பக்கத்திலே ஊற்றுப்புறத்திலும் காணப்படுகின்றன.உருத்திரபுரச் சிவன்கோயில் அந்நியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டமைக்கான தடயங்கள் இங்கே காணப்படுகின்றன.

இவ்வாலயம் சோழப் பெருமன்னர் காலத்துக்கோ அல்லது அதற்கு முற்பட்டதோ என்பதனை அக்காலத்து இலிங்கம் கிடைக்காவிடினும் அப்பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு இச்சிவாலயத்திற் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆவுடையார் கல்லுச் சான்று பகர்கிறது. இவ்வாவுடையார் கல் சற்சதுர வடிவமானதும் பிரம்மா விஸ்ணு உருத்திரபாகம் என்னும் மூன்று பாகங்களாக அமைந்துள்ளது. இச் சதுர ஆவுடையார் இராசராஜேஸ்வரச் சோழன் காலத்துக்கு முன்புதான் சிவாலயங்களில் வைத்து வழிபட்டு வந்ததாகவும் பிற்ப்பட்ட காலத்தில் வட்டவடிவமான ஆவுடையாரே பிரதிஷ்டை செய்ததாகவும் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் இருந்து உருத்திரபுரம் கிராமம் மிகப் பழமைவாய்ந்த கிராமம் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
 
குடிப்பரம்பல்
பழமை வாய்ந்த உருத்திரபுரத்தில் வாழ்ந்த மக்கள் அன்னிய ஆட்சியாளரின் படையெடுப்பின் காரணமாகவும் மலேரியா போன்ற ஆட்க்கொல்லி நோய்களின் காரணமாகவும் காலத்துக்குக் காலம் இருக்கையைதக்க வைக்க முடியாமல் மக்கள் இடம்பெயர நாடு காடாகவும் மறுபடியும் மக்கள் குடியேறுவதுமாக மாறிமாறிக் குடிப்பரம்பல் ஏற்ப்படலாயிற்று.

போர்த்துக்கேயர் கோட்டையை மாத்திரமன்றி எமது ஆலயங்களையும் அழித்து. அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு தம் தேவைகளை நிறைவேற்றினர். ஒரு தேவாலத்துக்குரிய மணியொன்றைச் செய்வதற்குரிய உலோகத்தினை இடைச்சிறுவன் ஒருவனால் காட்டப்பட்ட ஓரிடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இருபது விக்கிரகங்களை உருக்கிச் செய்ததாகப் போர்த்துக்கேய வரலாற்றாசிரியரான 'குவெஸ்ரோல்'பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.உருத்திரபுரீஸ்வரமும் இக் கோயிலைச் சார்ந்துள்ள உருத்திரபுரமும் பல்லாண்டுகளுக்கு முன்பே அன்னியரால் அழிக்கப்பட்ட போது பாதுகாப்புக்கருதி இச்சிவாலயத்திக்குரிய சிவலிங்கம் 'பொறிக்கடவை அம்பாள்' கோயிற் சூழலில் வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.இது உருத்திரபுரத்தினது தொன்மையையும் சிறப்பையும் மேலும் உறுதி செய்கின்றது.வன்னிப்பெருநிலப்பரப்பை ஆண்ட 'அடங்காப்பற்று'எனச் சிறப்பாக அழைக்கப்படும் வன்னியமன்னர்களது ஆதரவையும் போசிப்பையும் பெற்று உருத்திரபுரமும் சிறப்புற்று இருந்தது.எனினும் இந்நகரம் இதற்கும் காலத்தால் முந்தியதும் தொன்மையான நகரமும் ஆகும்.

உருத்திரபுரத்தினதும் அச்சிவாலயத்தினதும் அழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராய் இருந்த சேர் வில்லியம் துவைனம் அவர்கள் கனகராயன் ஆற்றுநீரை மறித்துக்கட்டி அந்நீர் கடலுடன் சேர்ந்து வீணாகாமல் இருக்க இரணைமடுக்குளத்தைக் கட்ட ஆய்வு செய்த காலத்தில் அதாவது 1882ஆம் ஆண்டு செப்டெம்பர் 02ம் திகதி உருத்திரபு சிவாலயத்தின் கட்டிட இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவை ஆவணப்படுத்தவும் பட்டது.

இரணைமடுக்குளம் ஆரம்பிக்கப்பட்டு முதற்குடியேற்றத்திட்டம் தற்போது கணேசபுரம் என அழைக்கப்படும் அன்றைய பழைய கொலனி 1939ஆம் ஆண்டு 39 குடும்பங்குளுடன் ஆரம்பிக்கப்பட்டபோதும் மிகக் குறைவானவர்களே வந்து குடியேறினர்.ஒருவருக்கு வீட்டுடன் இரண்டேக்கர் வீட்டு நிலமும் ஐந்து ஏக்கர் வயல் நிலமும் கொடுக்கப்பட்டது.அத்துடன் சகலவசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட போதும் குடியேற்றம் வெற்றியளிக்கவில்லை.

இக்குடியேற்றத்திட்டம் கிளிநொச்சி கண்டி வீதியின் மேற்குப்புறத்திற் புகையிரதப் பாதையின் அருகே அமைக்கப்பட்டதாற் கிளிநொச்சி நகரை விஸ்தரிக்க முடியாத நிலை காணப்பட்டது.இதைக்கண்ட அரசினர் அடுத்த குடியேற்றத்திட்டங்களைக் கண்டி வீதியின் மேற்குப்புறமும் இரண்டு மைல்கனுக்கப்பால் அமைக்கத் தீர்மானித்தனர்.

இதன்படி இரண்டாவது குடியேற்றத்திட்டமான தற்போதைய உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் அப்போது பரந்தன் புதுக்குடியிருப்புத்திட்டமென அழைக்கப்பட்டது.இக்குடியேற்றத்திட்டத்தில் 210 வீடுகள் அமைக்கப்பட்டது.இது 9ஆம் 10ஆம் வாய்க்கால்களை உள்ளடக்கி ஒருமைல் நீளமும் முக்கால்மைல் அகலமும் உடைய சற்சதுர வடிவில் ஆக்கப்பட்டது.இதனால் வீதிகள் அனைத்தும் நேராகக் காணப்பட்டன.

இங்கு குடியேற்றம் செய்யும் குடும்பங்கள் அனைத்தும் அதிகம் அங்கத்தவர்களைக் கொண்டதாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காரியாதிகாரி பிரிவில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டதுடன் ஒரே காரியாதிகாரிப பிரிவில் இருந்து தெரிவுசெய்யப்படுவர் ஒருவரை ஒருவர் ஏதோ ஒரு வகையில் அறிந்தவராக இருப்பர் என்ற காரணத்தினால் அவர்கள் அனைவரையும் பக்கத்து வீடுகளில் குடியிருக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது 'ரெயிலர்' வீதியின் வடக்குப் பக்கத்தில் வீ;டுகளை இமைத்து தென்பகுதியில் நெற்செய்கைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. எனவே வடக்குகப் புறத்தில் சில வீடுகள் கட்டப்பட்ட நிலையில் அப்பொழுது பெய்த கடும் மழை காரணமாக வீடுகட்டும் திசையை தென்புறமாக மாற்ற வேண்டி ஏற்ப்பட்டது. இங்கு கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் பழைய கொலனியில் கட்டப்பட்ட வீடுகளின் அமைப்பிற்கட்டப்பட்டன. ஆனாற் பின்னர் கட்டப்பட்ட வீடுகள் செலவு குறைவி;ற் சிறிதாகக் காணப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு காரியாதிகாரி பிரிவு மக்களும் ஒன்றாகவே குடியமர்த்தப்பட்டனர். உருத்திரபுரம் பகுதி அப்போது சாவகச்சேரித் தொகுதி;யுள் இருந்தமையால் அவர்களுக்கு முதலிற் கட்டிய பழைய கொலனி வீடுகள் போன்றன கொடுக்கப்பட்டன. பின்னர் முதலாம் இலக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்ப்பெயார்களில் இவ்வீதிகள் அழைக்கப்படலாயிற்று. உதாரணத்துக்கு சாவகச்சேரிக்குறுக்கு யாழ்ப்பாணக்குறுக்கு அளவெட்டிக்குறுக்கு கோப்பாய்க்குறுக்கு என எல்லாக் கிராமமும் இங்கும் காணப்பட்டன.அதுமாத்திரமன்றித் தாழ்த்தப்பட்ட இனத்தவர் ஒன்றாகவும் தொழில் ரீதியாக வாழ்வோர் தனியாகவும் குடியேற்றப்பட்டனர்.
 
புவியியற்தன்மை
பெரும்பாலும் இப்பிரதேசம் சமதரையாகவும் வண்டல்மண் செறிந்த மணற்தன்மை வாய்ந்த நிலமாகவும் காணப்படுகின்றது.பழைய கொலனியில் இரண்டேக்கர் மேட்டுநிலமும் 5ஏக்கர் வயல்நிலமும் கொடுக்கப்பட்டபோது இரண்டேக்கர் நிலம் வீட்டுடன் சேர்ந்த நிலமாதலால் தென்னை மா பலா கமகு வாழை போன்ற மரங்கள் கொடுக்கப்பட்டன.இவற்றை நடப்போதிய நிலம் இல்லாததாற் தோட்டம் செய்ய அவர்களால் முடியவில்லை.இதைக்கண்ட அரசு இரண்டாம் குடியேற்றத்திட்டத்திற்கு நான்கு ஏக்கர் வயல் நிலத்தையும் மூன்று ஏக்கர் மேட்டுநிலத்தையும் கொடுத்தது.

மேட்டுக்காணி மூன்றேக்கரிற் பின்புறமாக ஒரு ஏக்கர் காணியில் நாட்டுவதற்காகத் தென்னம்பிள்ளை 54ம் கொடுக்கப்பட்டது.வீட்டுடன் சேர்ந்த ஒரு ஏக்கரில் மா பலா வாழை என்பன நாட்ட அவை கொடுக்கப்பட்டன.வாழைமரம் குடியேற்றவாசிகளே பெற்றுச் செய்கை பண்ணவேண்டும்.மண்வெட்டி கோடறி காட்டுக்கத்தி அலவாங்கு ஆகிய உபகரணங்களும் உழவுக்காக ஒரு சோடி எருமை மாடும் ஒரு இரும்புக்கலப்பையும் கொடுக்கப்பட்டது.வீட்டுக்காணியின் மத்தியில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்திற் தோட்டம் செய்யவும் சிறுதானியம் செய்யவும் அறிவிக்கப்பட்டது.மேட்டுக்காணியில் வெட்டப்பட்ட பெரிய மரங்களின் அடிக்கட்டைகளும் மண்மேடுகளும் புற்றுப்புட்டிகளும் காணப்பட்டன.இவற்றைப் பிடுங்கி எரிக்கவும் புற்றுப்புட்டிகள் மண்மேடுகள் ஆகியவற்றை மட்டுப்படுத்தவும் அரசு குறித்த சிறுதொகைப் பணத்தை உதவியது.முதல் விதைப்புக்கு மானியமாக விதைநெல்லும் முதல் ஆறுமாதங்களுக்கும் உணவுக்கான பொருட்களும் கொடுக்கப்பட்டன. முதல் வருட சிறுபோக விதைப்புக்கு அரை ஏக்கர் நிலம் ஒருவருக்குச் சிபாரிசு செய்யப்பட்டது. நீர் பாயக்கூடிய ஒருவரது வயலில் எட்டுப்பேர் சேர்ந்து கூட்டாகக் கமம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஏட்டுப் பேரிடமும் மாடு கலப்பை இருந்த போதும் இரும்புகலப்பை உழவு தெரியாதவர்கள் வேறு வேலைகள் செய்தனர். இதன் மூலம் எல்லோரும் சேர்ந்து கூட்டாகச் செய்யும் பழக்கம் உண்டானது. உழுதல் விதைத்தல் நெல் வெட்டுதல் சூடடித்தல் போன்ற வேலைகள் கூலியில்லாமலே செய்யக்கூடியதாக இருந்தால் நட்டம் ஏற்பட வாய்ப்பிருக்கவில்லை.

ஆரம்பத்தில் நான்கு வீடுகளுக்கு ஒரு கிணறு வீதம் ஒரு காணியிற் கிணற்றைக் கட்டி அதில் நால்வரும் உபயோகிக்கும்படி பணிக்கப்பட்டது. பின்னர் காலக் கிரமத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிணறு அமைக்க உதவிப்பணம் கொடுக்கப்பட்டது.

பாடசாலையை மையமாக வைத்து ஒன்று முதல் தொண்ணூற்றொன்பது வீடுகள் மேற்க்குப்புறமாகவும் கிழக்குப்புறமாகவும் தெற்குப்புறமாகவும் 100 முதல் 166 வரையுள்ள வீடுகளும் வீதியின் வடக்கே 167 முதல் 210 வரையுள்ள வீடுகளும் அமைக்கப்பட்டன.சந்தை பொதுநிலையங்கள் கட்டுவதற்காக பாடசாலைக்கு வடக்குப்புறமாகப் பிரதான வீதிவரையும் தெற்க்குப்புறமாக இரு வீதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசமுமாகத் தொண்ணூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. வீதியின் வடக்குப்புறத்திலே தொண்ணூறு ஏக்கர் நிலம் மேச்சல் தரையாகவும் ஒதுக்கப்பட்டது. இதனை எள்ளுக்காடு என அழைத்தனர். உருத்திர
புரத்தின் நான்கு திசைகளும் காடாக இருந்ததனால் எள்ளுக்காடெனும் மேற்சற்தரையும் பற்றைக்காடாகவே காணப்பட்டது.

உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் மிக விரைவாக வளர்ச்சியடைந்ததைக் கண்ட அரசாங்கம் உருத்திரபுரத்தின் கிழக்குப் புறமாக உள்ள காட்டினை வெட்டி 109 வீடுகளைக் கொண்ட ஒரு குடியேற்த்திட்டத்தை உருவாக்கினர். இதனை முதலில் எட்டாம் வாய்காற் குடியேற்றத்திட்டமெனவும் அழைத்தனர். இதன் காரணமாக முன்னர் ஒதுக்கி இருந்த பாடசாலையைச் சுற்றிவிடப்பட்டடிருந்த குடிமத்தியை மாற்றி உருத்திரபுரம் குடியேற்றத்திட்டத்திற்கும் எட்டாம் வாய்காற் குடியேற்றத்திட்டத்திற்கும் இடையில் உள்ள நிலத்தினை ஒதுக்கி தபாலகம் மருந்தகம் மகப்பேற்று நிலையம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் வைத்தியசாலை விடுதிகள் என்பன கட்டப்பட்டன.

எட்டாம் வாய்காற் குடியேற்றத்திட்டத்தில் 109 வீடுகள் கட்ட இருந்த போதும் 89 வீடுகளே கட்டப்பட்டது. மிகுதி இருபது வீடுகளும் உருத்திரபுரத்தின் பொது சேவைக்கென ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தின் முன்னால் உள்ள ஒன்பதேக்கர் நிலத்தையும் பாடசாலைக்கென ஒதுக்கிவிட்டு மீதிநிலத்தில் எட்டாம் வாய்காற் குடியேற்றத்திட்டத்தின் தொடர்ச்சியான 89ஆம் விடு முதல் 108ஆம் வீடு வரை கட்டிக் கொடுக்கப்பட்டது. இவ் வீடுகள் இப்பொழுதும் 'சிவிக் சென்றர்' வீடுகள் என்றே அழைக்கப்படுகின்றன.

ஐம்பத்தெட்டாம் ஆண்டு இலங்கையிலேற்பட்ட இனக்கலவரம் காரணமாகக் கிளிநொச்சி துரித வளர்சி கண்டது. இதன் காரணமாகவும் இழைஞர்கள் அதிகம் பேர் இருந்ததாலும் விரிவாக்கத்திட்டம் என்ற பெயரில் உருத்திரபுரத்தின் மேற்க்குப்புறத்திற் குடியேற்றம் ஆரம்பமானது . இவை தற்போது 'சிவநகர்' என அழைக்கப்படுகிறது. இக் குடியேற்றத்திட்டத்தில் உருத்திரபுரகுடியேற்றவாசிகளின் அதிகம் பிள்ளைகளும் உறவினரும் ககாணப்பட்டனர். இத் திட்டம் விரிவாக்கப்பட்டு சிவநகர் இரண்டாம் குடியேற்றத்திட்டமும் ஆக்கப்பட்டது. பொது சேவைக்கென எட்டாம் பத்தாம் வாய்காலுக்கு இடைப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட பொதுக்கட்டிடங்களுடன் சிகரட்புகையிலை உலர்த்தும் கட்டிடங்களும் மாட்டுப்பண்ணைக்கான கட்டிடமும் கட்டப்பட்டன.

மீதியாகக் கட்டிடங்கள் கட்டப்படாதிருந்த நிலங்களை அக்காலப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரினைப் பாவித்தது அவர்களின் உதவியுடன் எட்டாம் பத்தாம் வாய்காற் குடியேற்வாசிகளின் பிள்ளைகள் இரத்தினம்பண்ணை ஆனந்தம்பண்ணை என்று இரு பண்ணைகளை ஆக்கி அதிற் குடியேறினர்.

இக்காலத்தில் மக்கள் அடாத்தாகக் குடியேறி அரசாங்கக் காணிகளில் இருந்த அதனைத் தமதாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக மேற்சற்தரவைக்காக விடப்பட்ட எள்ளுக்காடு என்று அழைக்கப்பட்ட மேற்சற்தரவையும் குடியேற்றத்திட்டமாக மாறித் தற்ப்பொழுது சக்திபுரம் என அழைக்கப்படுகிறது.
 
பொது நிர்வாகம்
ஆரம்பத்தில் யாழ்ப்பாண அரச அதிபரின் மேற்பார்வையில்ற் பச்சிலைப்பள்ளிக் கரைச்சி என்ற காரியாதிகாரி (DRO) பிரிவில் உருத்திரபுரம் அமைந்திருந்தது. இதன் கிராம அதிகாரியாகக் குஞ்சுப்பரந்தன் கிராம சேவகரே நிர்வகித்து வந்தார். ஆக்காலத்திற் கிராமாதிகாரிகளை அக் கிராமத்தின் பொது மக்களே தெரிவு செய்வர். கிராமத்தலைவர்களுக்குரிய கல்வித்தகமையுடையோர் விண்ணப்பிப்பர். விண்ணப்பிப்போரின் தெரிவு காரியாதிகாரியால் அப்பகுதி மக்களை ஒரு பொது இடத்தக்கு அழைத்து கையுயர்த்தி யாருக்கு கூடுதல் வாக்குக்கிடைக்கிறதோ அவரே கிராமத்தலைவராகத் தெரிவு செய்யப்படுவர்.

ஆனால் அரசாங்கம் பிற்காலத்தில் தானே நேரடியாகத் தெரிவு செய்தது. கிராமத் தலைவர் என்ற பெயரும் கிராமசேவையாளர் என மாற்றப்பட்டது. குஞ்சுப்பரந்தன் கிராமத்தலைவர் பிரிவில் உள்ள உருத்திரபுரம் கிராமம் உருத்திரபுரம் கிராம சேவையாளர் ஒருவரின் தலைமையின் கீழ் வந்தது. அத்துடன் கிளிநொச்சி கரைச்சி என்ற பெயரில் ஒரு காரியாதிகாரியின் தலைமையிற் கொண்டுவரப்பட்டது. உருத்திரபுரம் குடியேற்;றத்திட்டம் கொடுக்கும் போது ' சேர் கட்சன் துரை' என்னும் ஆங்கிலயர் ஒருவரே அரச அதிபராக இருந்தார். அவர் விலகிச் சென்றதும் தமிழர்களே அரச அதிபராக நியமனம் பெற்றனர். வடமாகாண யாழ்மாவட்ட அரச அதிபராய் முதல் நியமனம் பெற்ற அரச அதிபர் சிறீகாந்தா ஆவார்.

உருத்திரபுரம் கிராமசேவையாளர் முதன் முதல் நியமனம் பெற்ற போது அவரின் மேற்பார்வையில் உருத்திரபுரம் கிழக்கு மேற்கு புதுமுறிப்பு எள்ளுக்காடு சிவநகர் நீவில் ஆகிய பகுதிகள் இருந்தன. பின்னர் படிப்படியாக மாற்றமடைந்து தற்ப்போது உருத்திரபுரத்திற்கு ஒருவரும் எட்டாம் வாய்க்காலுக்கு ஒருவரும் சிவநகருக்கு ஒருவரும் எள்ளுக்காட்டுக்கு ஒருவருமாக நியமிக்கப்பட்டனர்.

ஆரம்பத்திற் பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட கிராமசபை ஒன்றே இருந்தது. இந்தக் கிராம சபையின் எல்லை வடக்கே பச்சிலைப்பள்ளியும் கிழக்கே புதுக்குடியிருப்பும் தெற்கே துணுக்காயும் மேற்கே பூனகரியும் இருந்தன. பின்னர் கிளிநொச்சி மாவட்டம் தனியாகவும் முல்லைத்தீவு மாவட்டம் தனியாகவும் நியமிக்கப்பட்ட பின்னர் கிளிநொச்சிக் காரியாதிகாரியின் பிரிவில் இருந்த துணுக்காய்ப் பிரதேசம் கொக்காவில் பழைய முறுகண்டி என்பன முல்லைத்தீவு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன.

உருத்திரபுரம் கிராமம் ஆரம்பத்தில் சாவகச்சேரிப் பாராளுமன்ற உறுப்பினர் பிரிவின் கீழ் இருந்தது. சாவகச்சேரித்தொகுதி வடக்கே நாவற்குளிக்கடலேரியையும் கிழக்கே முல்லைத்தீவுப் பிரதேசத்தையும் தெற்கே மன்னார் வவுனியா பிரதேசங்களையும் மேற்கே கடலையும் எல்லையாகக் கொண்டிருந்தது.
 
பாடசாலைகள்
ஆரம்பத்தில் உருத்திரபுரத்தில் மகாவித்தியாலயம் மாத்திரம் இருந்தது. இப் பாடசாலைதான் கிளிநொச்சியில் உள்ள உயர்தர வகுப்புக்கனைக் கொண்ட விஞ்ஞான கூடம் விவசாய கூடம் விளையாட்டிடம் அமைந்த ஒரே ஒரு பாடசாலை.இது போன்ற ஒரு பாடசாலை பழையிலும் அமைக்கப்பட்டது. அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள பாடசாலைகள் தட்டுவன் கொட்டி
முரசு மோட்டை கண்டாவளை கல வெட்டித்திடல் ஆகிய அடங்களில் இருந்தன. எனினும் இப்பாடசாலைகளில் ஒன்றிரண்டு மாணவர்களே மேல்வகுப்புக்களிற் கற்றனர். உருத்திரபுரத்திற் பிற்காலத்தில் 8ம் வாய்காலிற் பத்திமா பாடசாலையும் சிவநகரில் அரசினர் பாடசாலையும் புதுமுறிப்பில் அரசினர் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பகாலத்தில் மன்னார் வித்தியாதரிசியின் கீழும் அதன் பின் சாவகச்சேரி வித்தியாதரிசியின் கீழும் அதன் பின் கிளிநொச்சி வித்தியாதரிசியின் கீழும் உருத்திரபுர மகாவித்தியாலயம் செயற்ப்பட்டுவந்தது.
 
பிரயாணமும் பாதைகளும்
உருத்திரபுரம் குடியேற்றத்திட்டகாலத்தில் கண்டிவீதி முல்லைத்தீவு வீதியின் ஒரு பகுதி தவிர ஏனைய வீதிகள் அனைத்தும் கிறவல் வீதிகளாகவே காணப்பட்டன. பெரும்பாலான வீதிகள் இரணைமடுக்குள வாய்கால்கள் வெட்டப்பட்டபோது இதில் இருந்து எடுக்கப்பட்ட மண் போடப்பட்டு அதன் மேல் கிறவல் போடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்pலிருந்து வரும் மக்கள் ஏதாவது வாகனத்திலோ பரந்தன் சந்தியை வந்தடைந்து சாவகச்சேரியில் இருந்து உருத்திரபுரம் வரும் கொடிகாமம் செல்லையா என்பவருக்கு சொந்தமான தட்டிவானில ஏறிக் குஞ்சுப்பரந்தன் வந்து பொறிக்கடவை வழியாக உருத்திரபுரத்தை வந்தடைய வேண்டும். இந்த வான் தினமும் காலை 9 மணிக்குச் சாவகச்சேரியிலிருந்து புறப்பட்டு 11 மணிக்குப் பரந்தனை வந்தடையும்.

அங்குள்ள தேனீர்க்கடையிற் தேனீர் குடிப்பதற்காக அரைஅணி நேரம் நிற்கும். காலை கொழும்பு செல்லும் புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வருவோர் இறங்கி நிற்பர். இவர்களையும் ஏற்றிக் கொண்டு பரந்தன் பூநகரி வீதிவழியாகக் குஞ்சுப்பரந்தன் பொறிக்கடை அம்மன் வீதி வழியாக மதியம் 12 மணிக்கு உருத்திரபுரம் கூளாவடியை வந்தடையும். ஆங்கு ஓரிரு கடைகள் மாத்திரம் இருந்தன. இந்த வான் மாணிக்கப்பிள்ளையார் கோவில் வரை வந்து வந்த வழியே திரும்பிச் சென்று கூளாவடியில் நின்று மறுபடியும் இரண்டு மணிக்குப் புறப்பட்டுச் சாவகச்சேரி செல்லும். மாணிக்கப்பிள்ளையார் கோயிலுக்கப்பால் மக்கள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதியாய் இருந்ததால் வான் அப்பாற் செல்வதில்லை.

புரந்தனுக்கும் பொறிக்கடவை அம்மன் கோவிலுக்கும் இடையில் இரு தாம்போதிகள் இருந்ததால் கடுமழைக்காலத்தில் வான் முதலாவது தாம்போதியுடன் திரும்பிச் சென்றுவிடும்.உருத்திரபுரத்திலும் இரு தாம்போதிகள் உண்டு. இந்த வானைத் தவறிவிட்டோர் அனைவரும் நடந்தே வர வேண்டும். நடந்து வருபவர்களும் கூட்டமாக ஒன்று சேர்ந்தே வரவேண்டும். காரணம் காட்டுப்பாதை கள்வர் பயம். யாழ்ப்பாணத்திலிருந்து இரவுப் புகையிரதத்தில் வருபவர்கள் நடந்தே வருவர். சிலவேளை குஞ்சுப்பரந்தன் பாடசாலையில் இரவு தங்கி அடுத்தநாட் காலை வருவதும் உண்டு.

1952ல் எட்டாம் வாய்காற் குடியேற்றத்திட்டம் கொடுத்தபின் உருத்திரபுரம் ரெயிலர் வீதியான கரடிப்போக்கு உருத்திரபுரம் வீதி சிறிது சிறிதாக பாவனைக்கு வரத் தொடங்கியது. 55ஆம் ஆண்டுக்குப்பின் சிறிய வாகனங்கள் ஓடத் தொடங்கின. அதன் பின்னர் படிப்படியாக பஸ் சேவை வளர்ச்சி அடைந்து காலை 4 மணிக்கு உருத்திரபுரம் சிவன் கோயிலில் இருந்து புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகம் வரை ஒரு பஸ் ஓடியது. ஆதன் பின் பிரயாணகஷ்டம் இருக்கவில்லை. காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் இருந்தன. உருத்திரபுரத்தைச் சேர்ந்த தனியாரும் சிற்றூர்திகள் மூலம் போக்குவரத்துச் சேவையை நடத்தினர். சிறிய கார்களும் சிலர் வைத்திருந்தனர்.
 
வைத்தியவசதி
ஆரம்பத்தில் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கிழமையில் இரு தடவைகள் ஒரு வைத்தியஅதிகாரி வரும் ஒழுங்கில் நடமாடும் வைத்தியசாலை ஒன்று இருந்தது. கடும் சுகவீனமுற்றவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலை சென்றே வைத்தியம் செய்விக்க வேண்டும். 1957ம் ஆண்டளவில் கரைச்சிக் கிராமசபை ஒரு மகப்பேற்று நிலையத்தைக் கட்டிக் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைத்தது. அதன் அருகே மருந்தகம் ஒன்றை அரசினர் அமைத்தனர். வைத்தியருக்கும் தாதியர் தங்குவதற்கும் இரு விடுதிகள் அமைக்கப்பட்டன. மருந்தின் பாதுகாப்புக் கருதி மருந்துக் கலவையாளர் மருந்தகத்திலேயே தங்கவைக்கபப்பட்டார். மகப்பேற்று நிலையத்துக்கும் உள்ளுர்தாதிக்குமாக ஒருவரே நியமிக்கப்பட்டதால் ஒருவரே இரு வேலைகளையும் செய்ய வெண்டியதாயிற்று. ஆரம்பத்தில் மருந்துக் கலவையாளரும் மருத்துவ தாதியும் சிங்கள இனத்தவர்களாகவே இருந்தனர். எனினும் அவர்களுக்குத் தழிழும் ஓரளவு தெரிந்ததால். மக்களிடையே பிரச்சனை ஏற்படவில்லை.

மலேரியாக் காய்சலை தடை செய்வதற்காக கிழமை தோறும் கிருமி நாசினி எல்லா வீடுகளுக்கும் தெளிக்கப்பட்டது. கிணற்று நீருக்கு 'குளோறினும்' போடப்பட்டது.அத்தடன் இரத்தப்பரிசோதனை செய்து நோய் காணப்பட்டவர்களுக்கு மருந்தும் கொடுக்கப்பட்டது.பின்னர் மகப்பேற்று நிலையத்துக்குத் தனியான மருத்துவமாது நியமிக்கப்பட்டதுடன் தொலைபேசி இணைப்பும் செய்து கொடுக்கப்பட்டதுடன் கடுமையான நோயாளிகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லக் கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அம்புலன்ஸ் வண்டியை அழைக்க இத் தொலைபேசி உதவியாய் இருந்தது.மருந்துக் கலவையாள் தங்கியிரந்த மருந்தகத்தில் வைத்தியர் தங்கியிருக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது.1996ல் உருத்திரபுரமக்கள் அகதிகளாக உருத்திரபுரத்திலிருந்து பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்ததால் உருத்திரபுர மருத்தகமும் இடம்பெயர்ந்தது.1999ல் மீளக்குடியமர வந்தபோது மருத்தகமும் மகப்பேற்று நிலையமும் கிலமடைந்து காணப்பட்டது.பின்னர் அவை திருத்தப்பட்டதுடன் புதிய கட்டிடமொன்றும் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தன.
 
ஆலயங்கள்
உருத்திரபுரத்தின் புராதன ஆலயமான சிவாலயம் அழிக்கப்பட்டுக் காணப்பட்டது.உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயிலிற் பூசகராய் இருந்ந வேலாயுதசாமி தான் கனவிலே உருத்திரபுரம் சிவாலயத்தைக் கண்டதாகக் கூறி அங்குள்ள சில வாலிபர்களுடன் சேர்ந்து கோயில் கிலமடைந்திருந்த இடத்தை நோக்கிக் காட்டுப்பாதையூடாக நான்கு மணிநேரம் நடந்து சென்று கருங்கற்கள் காணப்பட்ட இடத்தைக்கண்டு இதுதான் சிவாலயமென்று அங்குள்ள பாலமரத்தடியில் உள்ள கல் ஒன்றுக்குப் பூசை செய்து திரும்பி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிலரை அழைத்துச்சென்று கொட்டிலமைத்து வழிபாடு செய்து வந்தார்.

இதையறிந்த அப்பொழுது வீரகேசரி நிருபராக இருந்த அகில இலங்கைக் காந்திசேவா சங்க நிர்வாகி சி.க.வேலாயுதபிள்ளை அவர்கள் இதனை வீரகேசரியிற் பிரசுரம் செய்தார்.இதைக்கண்ட யோகர் சுவாமியவர்களின் அடியார்கள் வடிவேல் சுவாமியவர்களையும் சேர்த்;து 1955ஆம் ஆண்டிலே கோயிலைக்கட்டி கும்பாபிசேகம் செய்து நித்திய நைமித்திய பூசைகளை நடைமுறைப்படுத்திவந்தனர்.குடியேற்றத்திட்டம் ஆரம்பமான 1949ஆம் ஆண்டிலே உருத்திரபுரம் குடியேற்றத்திட்டத்தின் கிழக்கு எல்லையிலே குடியேற்றத்திட்டத்தைப் பார்வையிடும் வகையில் வாயில் அமைத்து மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் உரவாக்கப்பட்டது.பொறிக்கடவை அம்மன் ஆலயம் பழையகாலம் தொட்டே இயங்கி வருகின்றது.பாலையடியிலும் எட்டாம் வாய்க்கால் சந்தி ஆலமரத்தின் கீழும் உள்ள விநாயகர் ஆலயங்கள் அப்பாதை வழியாகச் செல்லும் விவசாயிகளாற் பொங்கல் பூசைகள் செய்து பரிபாலிக்கப்படுகின்றன.நாளடைவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு பூசைகள் செய்யப்பட்டு வருகின்றன.இத்துடன் எள்ளுக்காட்டில் ஒரு முருகன் கோயிலும் கட்டிக் கும்பாபிசேகம் செய்து திருவிழாவும் செய்யப்படடுகின்றது.புதுமுறிப்பு அலைகரையில் கற்பகவிநாயகர் ஆலயம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றது.இத்துடன் உரத்திரபுரம் வயல் நடுவே நரசிங்க வைரவர் ஆலயமும் உருத்திரபுரம் உள்வீதிகளிலும் பல சிறு ஆலயங்கள் உண்டாக்கி வழிபட்டு வருகின்றனர்.அத்துடன் கிறிஸ்தவ ஆலயமாகப் பத்திமா ஆலயமும் சிவநகரிலும் எட்டாம் வாய்க்காற் சந்தியிலும் இரு குகைக்கோயில்களும் உருத்திரபுரத்திலும் உள்ளன.
 
பொது ஸ்தாபனங்கள்
பொது ஸ்தாபனங்கள் அதிகமுள்ள கிராமம் என்பதில் இங்குள்ள அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.காந்தீயவாதியான திரு.சி.க.வேலாயுதப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட அகில இலங்கைக் காந்தீய சேவா சங்கம் உரத்திரபுரத்தில் 1952ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகிப் பல்வேறு அபிவிருத்தி வேலைகளைச் செய்தது.அக்காலத்திலே தாய் தந்தையரற்ற வசதியற்ற சிறுவர்களைக் காந்தி நிலையம் என்ற பெயருடன் நடத்திப் பல இளைஞர்களக்குத் தொழிற்கல்வியையும் பாடசாலைக்கல்வியையும் பயிற்றுவித்து வழிகாட்டி வந்தது.தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பொறுப்பேற்கும் வரை அவரே நடத்தி வந்தார்.

சர்வோதய இயக்கத்துடன் இணைந்து மாற்றுத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்று கூடி இலங்கையின் பல்வேறு கிராமங்களிலும் சிரமதானப்பணியை மேற்கொண்டார்.இதில் முதலாவது வடபகுதிச் சிரமதானம் உருத்திரபுர மகாவித்தியாலய வீதிச் சிரமதனமாகும்.இது ஒரு கிழமை நடைபெற்றது.காந்திசேவா சங்கத் தலைமைப் பணிமனை அமைக்கவும் பல மாணவர்களை வைத்துப் பராமரிக்கவும் விவசாயப்பயிற்சி கைத்தொழில்பயிற்சி ஆகியன நடத்தவும் உருத்திரபுரத்தில் அரசாங்கத்தின் நிலம் பெறப்பட்டது.தொண்டைமான் அவர்கள் மந்திரியாய் இருந்த பொழுது தும்புக் கைத்தொழிற் கட்டிடம் கொடுக்கப்பட்டது.

இச் சங்கம் பெண்களுக்கெனத் தர்மபுரத்திற் கஸ்தூரிபாய் இல்லத்தையும் பப்படத் தொழிற்சாலையையும் நெசவுக் கைத்தறி நிலையத்தையும் அமைத்தது.

கோணாவிலிற் காந்திக்கிராமம் என்ற பெயரில் 105 ஏக்கர் நிலத்தைப் பெற்றுத் தென்னந்தோட்டத்தையும் பயிர்செய்கையையும் மந்தை வளர்ப்பையும் 3 ஏக்கர் கொண்ட வீட்டுத்திட்டமொன்றையும் மர வேலைத் தொழிற்சாலையையும் அமைத்தார்.

'அப்பு' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட உருத்திரபுரம் மகாவித்தியாலய அதிபர் திரு.வே.கதிரவேலு அவர்கள் இந்தியா சென்று 'வாரதாக்'கல்வி பயின்று குருகுலத்தை 1964ல் ஆரம்பித்து வளர்ச்சி பெறச் செய்தார்.இங்கு ஆதரவற்ற ஆண் குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் அவரும் மனைவியும் பராமரித்து வந்தனர்.அவர்களுடன் கண் தெரியாதவர்கள் மணநேயாளர் அங்கவீனர் எனப்பலரையும் பராமரித்து வந்தார்.அங்கு வளர்க்கப்பட்ட குழந்தைகள் சுயதொழில் செய்து தம் வாழ்க்கையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து அதன் வெற்றி கண்டு மன நிம்மதியும் அடைந்தார்.

கைத்தறி செய்வதற்கான பல தறிகளைக் கொண்ட நெசவாலை ஒன்றை அமைத்து அதிற் பல மாணவர்களை ஈடுபடுத்தி இதன்மூலம் தமது மாணவர்களுக்குத் தேவையான படுக்கை விரிப்புக்கள் போர்வைகள் துவாய்கள் என்பவற்றைப் பெற முடிந்தது.மிகுதியை விற்பனை செய்வதன் மூலம் தம் தேவைக்கான ஒரு பகுதிப் பணத்தைப் பெற முடிந்தது.

அச்சுக்கூடம் ஒன்றை ஏற்படுத்தி அதில் மாணவர்களுக்குப் பயிற்ச்சியளித்ததுடன் குருகுலத்தின் செலவின் பெரும்பகுதியை இதன் மூலம் ஈடுசெய்ய முடிந்தது.ஒட்டுத்தொழிலகம் ஒன்றை உருவாக்கி அதிலும் பல மாணவர்களை ஈடுபடுத்தி சுயதொழிலுக்கு வாய்ப்பளித்தார்.இந்நிலையம் தமிழீழ யுத்தம் காரணமாக இதற்கான மூலப் பொருட்கள் கிடையாமையினால் இதற்கான கட்டிடங்களும் உபகரணங்களும் உபயோகமற்ற நிலையில் உள்ளது.

தொழிலாளர் தம் பிள்ளைகளைத் தாம் வேலைக்குப் போகும் போது அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சிறுவர் பாதுகாப்பகம் ஒன்றை அமைத்து நெறிப்படுத்தினார்.விவசாயப் பண்ணை ஒன்றை உருவாக்கி நெற்செய்கையையும் தோட்டச்செய்கை மூலம் மிளகாய் கத்தரி போன்ற உப உணவுப் பயிர்களையும் பழ மரச்செய்கையையும் உருவாக்க 35 எக்கர் நிலத்தை உபயோக்படுத்தினார்.மிளகாய்ச்செய்கை பெரு வருமானத்தைச் சேர்த்துக் கொடுத்ததுடன் சுயதேவைப் பூர்த்தியையும் ஏற்படுத்தியது.இத்துடன் பண்ணைச் செய்கையும் நடைபெற்றதால் தமக்குத் தேவையான பால் தயிர் போன்றவற்றைப் பெறமுடிந்தது.ஐந்து ஏக்கர் தென்னைச்செய்கையும் இடம்பெற்றது.கிராஞ்சியிலும் 25 ஏக்கர் நிலம் இருந்தது.வெதுப்பகம் ஒன்றை உருவாக்கி அதிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.ஒருவேளை உணவையும் இதன் மூலம் ஈடுசெய்ய முடிந்தது.மிகுதியை வெளியே விற்பனை செய்ததன் மூலம் ஒரு தொகைப் பணத்தையும் பெறமுடிந்தது.

1988ல் இந்தியப் படையினரின் யாழ்ப்பாணம் இராசவீதித் துப்பாக்கிச் சூட்டில் இவரும் இவரது மனைவியும் இங்கிலாந்திலிருந்து வந்த இவரது மகளும் மருமகனும் அவரது உறவினர் ஒருவரும் மரணமாயினர். முகளின் ஒரு வயதுக் குழந்தை மாத்திரம் உயிர் தப்பியது. இதன் பின்னரும் 1994ஆம் ஆண்டு வரை குருகுல நிர்வாகம் அதனை நிர்வகித்தது. பின்னர் புனர்வாழ்வுக்கழகம் அதனைப் பொறுப்பேற்றுக் கொண்டது.

எட்டாம் வாய்காலில் 'லோங்ஸ்' ஸ்தாபனம் என்ற கிறிஸ்தவப் பாதிரிமாரால் ஆண்களுக்கான ஆதரவு நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் நடைபெற்று வருகின்றது. இங்கும் பல்வேறு வகையான தொழிற்ப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. பத்திமா மாணவிகள் விடுதி என்ற பெயரில் உருத்திரபுரத்திற் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் ஆதரவற்றோர் பாதுகாப்பு நிலையம் ஒன்றும் உள்ளது. இங்கு பல இடங்களிலிருந்தும் கிறிஸ்தவப் பெண்பிள்ளைகள் வந்து பாதுகாப்பாக இருந்து கல்வி கற்கின்றனர்.

மகாதேவ ஆச்சிரமம் என்ற பெயரிற் சைவ மதத்தைப் போதிக்கும் வகையிலும் பண்ணொடு பாடல் போன்ற இசை நிகழ்சிகளை நடத்தவும் அறநெறிப்பாடசாலை நடத்தவும் உருத்திரபுரம் மகாவித்தியாலய அதிபர் விடுதியில் வடிவேல் சுவாமிகள் தலைமையில் மாதாஜி பரமானந்தவல்லி. திரு.த.நல்லதம்பி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டு இப் பகுதி மாணவர்களுக்கும் பெரியோர்களுக்கும் சமய கம்மந்தமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. பாடசாலை விடுதி வசதியற்றிருந்ததால் உருத்திரபுரம் வைத்தியர் விடுதியிற் சில காலம் இவ் ஆச்சிரமம் நடைபெற்றுப் பின்னர் ஜெயந்தி நகருக்கு மாற்றப்பட்டு பல கட்டிட வசதிகளுடன் தற்ப்பொழுதும் நடைபெற்று வருகின்றது. வடிவேல் சுவாமிகள் தமக்குப் பின் ஆச்சிரமத்தை பொறுப்பாளராக காணேசானந்த மகாதேவ சுவாமிகளை நியமனம் செய்தார். இப்பொழுது ஆச்சிரமம் அவரது மேற்பார்வையில் நடைபெறுகின்றது. வறிய சைவ மாணவர்களுக்கான விடுதியை புதுமுறிப்பில் உள்ள தனது சொந்தக் காணியிலும் பெண்களுக்கான விடுதியை ஜெயந்தி நகரிலும் நடத்தி வருகின்றார்.
 
விளையாட்டுக் கழகங்கள்
உருத்திரபுரத்தில் 1952ம் ஆண்டு அங்குள்ள வாலிபர்களைக் கொண்டு வாலிபர் சங்கமொன்று உருவாக்கி விளையாட்டுடன் தலைவர் திரு. ஜயாத்துரை அவர்களால் அன்பளிக்கப்பட்ட நிலத்தில் ஒரு வாசிகசாலையை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார்கள். அச் சங்கத்துக்கென அரை ஏக்கர் நிலம் பெற்று அதில் வாசிகசாலையும் விளையாட்டிடமும் உருவாக்கப்பட்டது. உரு;த்திரபுரம் மகாவித்தியாலய ஆசிரியர்களும் உயர்வகுப்பு மாணவர்களும் இவ் விளையாட்டு இடத்தில் பங்கு பற்றினர். 1957ல் உருத்திரபுரம் மத்தியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் என்ற பெயருடன் வருடந்தோறும் விளையாட்டுப் போட்டிகளும் வெளியிட விளையாட்டுக் கழகங்களுடன் போட்டியி;ட்டு வெற்றியும் பெற்று உருத்திரபுரத்திற்கு பெருமை சேர்த்துக் கொடுத்தனர்.

சில நாட்களின் பின் முன்னர் வாசிகசாலையும் விளையாட்டிடமும் இருந்த நிலத்துக்கண்மையில் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் தொடர்சியாக உருத்திரபுரம் கிழக்கிலுள்ளவர்கள் சந்திரோதைய விளையாட்டுக்கழகம் என்ற பெயரில் ஒரு விளையாட்டுக்கழகத்தை உருவாக்கினர். இம் மூன்று விளையாட்டுக் கழகங்களும் விளையாட்டுடன் மாத்திரம் நின்று விடாமல் வாசிகசாலைகளையும் சனசமூக நிலையங்களையும் உருவாக்கிச் சிறந்த சேவை புரிந்து வருகின்றன. 1996ல் ஏற்பட்ட இடம் பெயர்வின் பின்னரும் கூட 1999 இறுதியில் சிறிது சிறிதாக மக்கள் மீளக் குடியமர்ந்து மேற்படி செயற்பாடுகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது.

கலையை வளர்க்கும் நோக்கத்துடன் தொழிலாளர்கள் வேலை செய்து ஓய்வாய் இருக்கும் போது அவர்களை மகிழ்விக்கவும் செந்தமிழ்க்கலாமன்றம் என்ற பெயரில் ஒரு கலாமன்றத்தை ஆரம்பித்து மாதந்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். முருகேசு குலசிங்கம் அவர்களும் தற்போது கனடவில் வசிக்கும் கலைஞர் கிருபா அவர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.
 
தபாலகம்
ஒரு நாட்டிலுள்ள மக்கள் தம் உறவினருடனோ மற்றவர்களுடனோ தொடர்பு கொள்ளப் பல ஊடகங்கள் இருக்கின்றன. அவற்றிக் கடிதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் குடியேற்ற அதிபர் காரியாலயமும் சென்று தமக்கு கடிதம் வந்திருக்கிறதா என்று பார்த்து எடுத்தச் செல்வர். இக் கடிதங்கள் பரந்தன் தபாலகத்திலிருந்து குஞ்சுப்பரந்தன் பகுதிக்கு விநியோகிக்கும் தபாற்சேவகர் கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இங்குள்ள கடிதங்களை எடுத்துச் செல்வார்.

சோற்ப நாட்களுக்குள் உருத்திரபுரம் உபதபால் அதிபராக மீசாலையைச் சேர்ந்த தருமலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆயினும் தபாலகம் கட்டப்பட வில்லை. ஆக்கால நடைமுறை யார் தபாலதிபராக நியமிக்கப்படுகிறாதோ அவரே தபாலகம் நடத்த வசதியான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும். ஆனால் குடியேற்றத்திட்டங்களில் அரசாங்கமே அதற்கென ஒரு கட்டிடத்தைக் கட்ட வேண்டும். ஊபதபால் அதிபர் தனியார் வீடொன்றில் அதற்கான இடத்தைப் பெற்றுக் கொண்டார். தபாற்சேவகர் ஒருவர் பரந்தன் தபாலகத்திலிருந்து குஞ்சுப்பரந்தன் தபாலகத்திற்குரிய தபாற்பையையும் உருத்திரபுரம் தபாலகத்துக்கான தபாற்பையும் கொண்டு வருவார். வரும் வழியிலுள்ள குஞ்சுப்பரந்தன் தபாலகத்தில் அத்தபாலுக்குரிய பையைக் கொடுத்து விட்டு உருத்திரபுரத்துக்கான பையுடன் வருவார். ஆப் பையிலுள்ள கடிதங்களை ஒழுங்கு செய்து கடிதங்களை உரியவர்களிடம் கொடுத்து விட்டுத் தபாலகத்திலேயே தங்கி நின்று பிற்பகல் இங்குள்ள தபாற்பெட்டிகளில் உள்ள தபால்களை எடுத்து வந்து தபாற்பையிற் கட்டி தபாலக முத்திரையிட்டு அதை எடுத்துக் கொண்டு குஞ்சுப்பரந்தன் தபாலகத்திலுள்ள தபாற்பையையும் எடுத்துக் கொண்டு பரந்தன் தபாலகம் செல்வர். தபாலகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த வேறு நாட்களும் தொழிற்படும். தபால் விநியோகம் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் மாத்திரம் நடைபெறும்.

இரண்டாவது குடியேற்றத்திட்ட வீடுகள் கட்டப்பட்ட போது உப தபாலகமும் பொதுஸ்தாபனங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற் தபாலகமும் கட்டப்பட்டது. இதன் பின் இரு தபாற் சேவகர்கள் நியமிக்கப்பட்டு அவர்களே கடிதங்களை விநியோகித்தனர். கடிதங்களை பரந்தனிலிருந்து கொண்டு வருவதும் 'றண்ணர்' என்ற ஒருவராற் செய்யப்படும்.

காலம் செல்லச் செல்லத் தபாலூழியரின் தொகை கூடியதுடன் தந்தி விநியோகத்திற்கும் ஊழியர்கள் நியமனம் பெற்றனர். ஆத்துடன் சிவநகரிலும் ஒரு தபாலகம் ஆக்கப்பட்டது.
 
கூட்டுறவு
ஆரம்பத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லினைக் கொள்வனவு செய்யும் முகமாக உற்ப்பத்திப் பொருட் கூட்டுறவுச் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகள் நன்மையடைந்தனர். அத்துடன் சில்லறைக் கடையினையும் உருவாக்கினர். பின்னர் இச் சங்கம் பல நோக்குச் சங்கமென மாற்றப்பட்டு கணேசபுரத்தில் உள்ளவர்களையும் இணைத்து ஒரே சங்கமாக உருவாக்கினர். இதன் தலைமையகம் உருத்திரபுரத்தில் அமைந்திருந்தது. இச் சங்கம் மூன்று சில்லறைக் கடைகளையும் உருவாக்கியது. ஓன்று கனேசபுரத்திலும் மற்றயது சங்கத்தலைமையகத்திலும் மற்றையது கூளாவடியிரும் அமைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் புதிய நடைமுறைப்படி கிளிநொச்சிப்ப பட்டினத்திலுள்ள சகல பலநோக்கு கூட்டுறவு சங்கங்களையும் இணைத்து கரைச்சி தெற்குப் பலநோக்கு சங்கமென ஆக்கப்பட்டது.இச் சங்கம் தற்பொழுது மூன்றாகப் பிரிக்கப்பட்டு அக்கராயன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் கரைச்சி கிழக்குப் பலநோக்கு கூட்டுறவுச் சங்கமென அழைக்கப்படுகின்றது.

மக்களின் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு 1955ல் உருத்திரபுரத்தில் ஐக்கிய நாணய சங்கமொன்று உருவாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஐந்துக்கு மேற்ப்பட்ட ஐக்கிய நாணய சங்கங்கள் உருவாக்கப்பட்ட போதும் அனைத்தும் மறைந்து விட்டன. அரசாங்கம் வீட்டுக் கடனை அறிமுகப்படுத்திக் கிராமங்கள் தோறும் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத்ததை உருவாக்கியது.இதனால் ஐக்கிய நாணய சங்கங்களும் மேற்படி பெயரில் இயங்க வேண்டியதாயிற்று. சிகரட் புகையிலைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக உருத்திரபுரத்திற் சிகரட்புகையிலைச் சங்கமொன்றை உருவாக்கியதுடன் அங்கு சிகரட் புகையிலை பதனிடும் மூன்று தொழிற்சாலைகளை அமைத்தப் பலருக்கு வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள வழி சமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆயினும் சொற்ப காலத்தில் இதுவும் பலன் கொடுக்காமல் மறைத்து விட்டது.

இளைஞர் சங்கங்களை உருவாக்கி இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு விவசாயக் காணிகளை அனைத்து அங்கத்தவர்களுக்கும் பெற்றுக் கொடுத்த செயலும் மறக்க முடியாது.
 
அரசியல்
உருத்திரபுர மக்கள் தம் தொழில் சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டதுடன் அரசியலிலும் மிகுந்த அக்கறை காட்டினர். ஆரசியற் கட்சிக் கூட்டங்களில் உருத்திரபுரத்தைச் சேர்ந்த பலர் பேச்சாளர்களாக காணப்பட்டதுடன் உள்ள10ர் அரசியலிலும் பங்கு கொண்டனர். கரைச்சிக் கிராமசபையில் தலைவராகவும் உபதலைவராகவும் உறுப்பினராகவும் இருந்து உருத்திரபுரததிற்குப் பெருமை சேர்த்தனர்.
 
சுடலை
ஆரம்பத்தில் உருத்திரபுர மக்களின் சுடலை சிவநகர் ஒற்றைப்பனையடி என்ற இடத்தில் இருந்தது. எட்டாம் வாய்க்காலில் உள்ளவர்கள் கிளிநொச்சியில் உள்ள சுடலையையே பாவித்தனர்.

1957ம் ஆண்டுக்குப்பின் புதுமுறிப்பில் சுடலை தெரிவு செய்யப்பட்டு தொடர்ந்து அதையே உபயோகித்து வருகின்றனர். சிவநகரில் உள்ளோர் சிவநகரில் உள்ள காட்டில் நியமிக்கப்பட்ட சுடலையைப் பாவிக்கின்றனர். சுpவநகரின் மேற்குப்பகுதியில் உள்ளோரே இதை பாவிக்கின்றனர். ஏனையோர் உருத்திரபுரம் சுடலையைப் பாவிக்கின்றனர்.

 
உருத்திரபுரத்தில் கல்லி கற்று உயர்பதவி வகித்தோர்
உருத்திரபுரத்தில் கல்வி கற்றோரில் பலர் பல இடங்களிலும் உயர்பதவிகளில் இருக்கின்றனர். திரு.அ.கணபதிப்பிள்ளை அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். யாழ் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.அமரர் வே. நடேசபிள்ளை அவர்கள் அதியுயர் பதவியான உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக கடமையாற்றினார் திரு.வே. ஐயம்பெருமாள் அவர்கள் இலங்கை வங்கியின் மாவட்ட அதிகாரியாக பணியாற்றி உள்ளார். திரு.க. விமலதாசன் அவர்கள் இளைஞர்சேவை அதிகாரியாக இருந்துள்ளார். திரு.மு.சண்முகராசா அவர்கள் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். திரு.க.கணேசு தரு.க.மகேசன் ஆகியோர் நெற்சந்தைப்படுத்தும் அதிகாரியாகவும் உதவித் திட்டமிடல் அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

ஒரு காலத்தில் கரவெட்டியிலும் சாவகச்சேரியிரும் எந்த வீட்டு கதவைத் தட்டியும் ஆசிரியர் இருக்கிறாரோ என்று கேட்பின் 'ஆம்' என்று பதில் வரும் எனக் கூறுவர் இன்று உருத்திர புரத்திலும் இப்படியான பதிலைக் கேட்க முடியும் இந்தளவுக்கு கல்வியாளர்கள் அதிகம் உள்ள கிராமம் உருத்திர புரமாகும். இன்று வைத்தியர்கள் பொறியியலாளர்கள் பலரைக் கொண்ட கிராமமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

இத்துனை சிறப்புமிக்க உருத்திரபுரம் 1996ம் ஆண்டு இடம் பெற்ற இனயுத்தம் காரணமாக உள்ளபோரிலேயே இடம் பெயர வேண்டி ஏற்ப்பட்டது. இவர்கள் மீள் குடியேறி 1999ம் ஆண்டு வந்தபோது உடைந்த வீடுகளையும் காடு அடர்ந்த வீதிகளையுமே காணமுடிந்தது.

திடீரென இடம்பெயர வேண்டி ஏற்ப்பட்டதால் தமது பாவனைப் பொருட்களையோ வேறு எந்தப் பொருட்களையுமோ எடுத்து செல்லாது முக்கியமானதும் தூக்கிச் செல்லக் கூடியவற்றையுமே எடுத்துச் சென்றனர். பின்னர் உடமைகளைப்பார்க்கவும் எடுத்துச் செல்லவும் வந்தவர்கள் அரசப்படையினரின் துவக்குச் சூட்டுக்கு இலக்காகி மரணமாயினர். இதைச் சாட்டாக வைத்து வீடுகளில் உள்ள ஓடுகள் மரங்கள் கதவுகள் ஜன்னல்கள் போன்ற பெறுமதிமிக்கப் பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டன. எனவே கிளிநொச்சி மீட்கப்பட்டபின் உருத்pரபுரம் வந்தோர் தம் வீட்டு எல்லைகளையே காணமுடியாத வகையில் காடுமண்டி வீதிகள் அனைத்தும் மறைவிடமாகக் காட்சியளித்தன மக்கள் இடம் பெயர்ந்த போது அவர்களது பாடசாலைகள் பொதுஸ்தாபனங்கள் இடம் பெயரவேண்டி ஏற்ப்பட்டது.

இது நன்கு சீர்பெற முன்பு மறுபடியும் 2007ல் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் மக்களை ஓடஓடக்கலைத்து முள்ளிவாய்க்காலில் பல உயிர்களைக் காவு கொண்டு பல உயிர்களை அங்கங்கள் இழக்கச் செய்து கம்பி வேலியில் அகதிகளாக அடைத்து வைத்து வெறுங் கையுடன் உருத்திரபுரம் அனுப்பி வைத்தனர். இவர்கள் மறுபடியும் தம்மை நிலைப்படுத்த எத்தனை ஆண்டுகள் செல்லுமோ தெரியவில்லை.

       
நன்றி திரு.கா.நாகலிங்கம்

0 கருத்துக்கள்:

Post a Comment