இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.
Showing posts with label ஆக்கங்கள். Show all posts
Showing posts with label ஆக்கங்கள். Show all posts

07 January 2011

எமது கிராமத்தின் சில பூக்கள்

0 கருத்துக்கள்

மார்கழி மழையில் நனைந்து சிலிர்த்து கிடக்கும் எம் கிராமத்து பூக்கள் சிலவற்றை பார்க்க இங்கே சொடுக்கவும்

10 October 2010

என் கனவு உருத்திரபுரம் - எழுதுவது மா.குருபரன்

0 கருத்துக்கள்
என் அறிமுகம்: நான் குருபரன். எனது ஆரம்ப கல்விகள் பற்றிமா றோ.க.வி இலும் இடம் பெயர்ந்த பின் அதாவது 1996 இன் பின் உருத்திரபுரம் மகாவித்தியாலயத்திலும் உயர்தரம் கிளிநொச்சி மத்தியகல்லூரியிலும் பயின்றேன். என் பற்றிய அறிமுகத்திற்கு இவை போதுமானவையே.. :P எனது வலைப்பதிவு பக்கம் வருவதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்
********************************************************************
எமது குறும்புகளையும் குழப்படிகளைம் சகித்துக்கொண்ட உருத்திரபுரத்தின் அத்தனை தெருக்களுக்களும் இந்த நினைவுகளும் கனவுகளும் சமர்ப்பணம். நான் படித்த பாடசாலைகளில், நான் விளையாடிய மைதானங்களில், நான் ஒடித்திரிந்த கோயில் திருவிழாக்களில், நண்பர்களோடு சேர்ந்து செய்த அட்டகாசங்களில், நான் பழகிய மனிதர்களில் என்னை பாதித்த அத்தனை நினைவுகளையும் உங்களுடன் பகிர்கிறேன்....

கிராமம் என்றால் எப்படி இருக்கும் என்று யாராவது யோசித்தால் நிட்சயமாக வரவேண்டியது உருத்திரபுரம் கிராமத்திற்கே.சுற்றி மரங்கள்,குளங்கள்,வாய்க்கால்கள்,வயல்கள்,கோயில்கள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,மைதானங்கள்,அங்காடிகள்,மதவுகள் வலிகளற்ற காற்று,ஒற்றுமையான மக்கள், வளம் நிறைந்த மண்.. இப்படி உருத்திரபுரத்தின் அழகையும் செழிப்பையும் உணர்ந்தால்தான் புரியும்.

மாலை நேரத்தில் வீதிகளில் விடையாடும் சிறுவர்கள்..மதவுகளில் இருந்து அரட்டையடிக்கும் பெருசுகள்...கோயில்களை சுற்றும் குமரிகள்..அங்காடிகளை மொய்க்கும் மக்கள் என உருத்திரபுரத்தின் வீதிகளில் பசுமைகள் தான் அதிகம்...


தொடரும்...

உங்கள் நினைவுகளையும் இங்கு தொடர்பதிவாகவோ அல்லது ஒர் பதிவிலோ  எழுதுவதாயின் எழுதி அனுப்பி வைக்க வேண்டிய முகவரி duruthirapuram@gmail.com

07 October 2010

சேனாவின் நினைவுகளுடன்

0 கருத்துக்கள்
"சேனா" என்று உன்னை
செல்லமாய் அழைத்தோம் .
செய்தோம் என்ன தவமென்று
எண்ணியே பலமுறை வியந்தோம்
சென்றாய் எங்கு நீ?
உதைபந்துக் களங்களில்
உன் முகந் தேடுகிறோம்

நெற்றி பிளந்தோடிய காயம் வந்தும்
சுற்றிக்கட்டிய கைக்குட்டையுடன்
பற்றிய உறுதியுடன் நின்றாய் - நீ
தட்டிய பந்தும் மறவாது வசந்தீ

கோல் காப்பு பணியில்
தூண்போல் நின்றவன் நீ
கோப்பைகள் நாம் தூக்க
காரணமாய் இருந்தவன் நீ

ஆறுநாள் தாடியுடன் ஆடுகளம் வருமுனக்கு
நூறுபேர் வந்தாலும் இணையாகுமா?
எத்தனை உதைகளைத் தடுத்தாய் !
ஏன் உன் உயிரிழந்து விழுந்தாய் ?

எங்கு நீ சென்றாலும்
எம் நண்பனே உன்னை மறவோம்
"உன் பெயர் சொல்லியே
பல கோப்பைகள் வெல்வோம்
                                                                                  - குணா -

அனுப்பியவர் : பிரதீஸ்

தமிழீழத்தின் சிறந்த கோல்காப்பாளருக்கான விருது வென்ற செல்லமாய் "சேனா" என்று அழைக்கப்படும் இந்த வீரன் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட ஏ அணியின் கோல்காப்பாளர். 

மீண்டும் உயிர் பெறும் கிராமம் உருத்திரபுரம் - தீபச்செல்வன்

0 கருத்துக்கள்
உருத்திரபுரம் : மீண்டும் உயிர் பெறும் கிராமம்


தன்னம்பிக்கையும் வலிமையும் வளர்ச்சியும் மிக்க கிராமமாக வரவேற்கும் உருத்திரபுரம் கிராமத்தின் எல்லையில் துயரமுகத்துடன் இருக்கிறது உருத்திரபுரம் வடக்கு என்கிற எள்ளுக்காடு கிராமம். விரல்களற்ற கைகளை நெற்றியில் வைத்து பார்த்தபடி என்னை வரவேற்ற அந்தத்தாயின் முகத்தில் யுத்தம் கொடும் காயங்களை வரைந்திருக்கிறது. இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. வயல்களும் பயன்தரு மரங்களும் கோயில்களும் என்று நீண்டகால வாழ்வை உறுதியுடன் சொல்லும் எச்சங்கள் இன்னும் அந்தக் கிராமத்தில் நிற்கின்றன என்று குறிப்பிடும் கட்டுரையாளர் தீபச்செல்வன் யுத்தகால மண்மேடுகளும் அழிவுகளும் மிகுந்திருப்பதுடன் பேரழிவுகளின் காட்சிகளுடன் எல்லைப் பகுதியாக சிவநகர் என்ற கிராமம் தெரிவதாகவும் தெரிவிக்கிறார்.


உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் ஏழாம் வாய்க்கால் முதலிய பகுதிக் கிராமங்கள் மீளக் குடியேறி ஆறு மாதங்களுக்கு மேலாகின்றன. அந்தப் பகுதியில் மக்கள் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள். மனதை குளிரச் செய்யும் காட்சிகளை இதமான காற்றை வீதிக்கு அருகாக கூட வரும் ஆற்றைப் பார்க்கும் பொழுது என்ன செழிப்பான கிராமம் என்றே வியக்கத் தோன்றுகிறது. உருத்திரபுரம் நீண்ட கால விவசாயக் கிராமம். 1950களில் வந்து அந்தக் கிராமத்தில் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளை கடந்து உருத்திரபுரம் கிராமம் வளர்ந்திரு;கிறது. அப்படிச் சொல்வதைவிட ஆறு தலைமுறைகளின் உழைப்பில் வளர்ந்த கிராமம் என்றே சொல்லலாம். இப்படி நம்பிக்கை ஊட்டும் இந்த கிராமம் வன்னிப் போரில் முக்கியமான எல்லையாகவும் மண்மேடுகள் மிக்க தடுப்பு அரண்களாகவும் போருக்கு முகம் கொடுத்திருக்கிறது.


உருத்திரபுரம் கிராமத்திற்கு சென்ற பொழுது முதல் முதலில் அறுவடை செய்யப்பட்டு மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளும் திட்டு ஒன்றில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்ல்லையும்தான் பார்த்தேன். நீங்கள் அறுவடை செய்த நெல் மூட்கைளா? என வியப்புடன் கேட்ட பொழுது ஆம் நாங்கள்தான் அறுவடை செய்தோம் என்று புன்னகையுடன் ஒரு இளம் விவசாயி குறிப்பிட்டார். உருத்திரபுரம் எட்டாம் வாய்க்காலில் உள்ள சிறிய கடைத்தொகுதிகள் உள்ள தெருவில் அவர் ஒரு கடையையும் நடத்துகிறார். எட்டாம் வாய்க்கால் சந்தை என்று சொல்லுமளவில் கடந்த காலத்தில் அந்த பிரிவில் முக்கியமான வியாபார தளமாக அந்த தெரு விளங்கியது. இப்பொழுது அங்கிருந்த பல கடைகள் வெறுமையாக சிதைந்தபடியுள்ளன. சந்;தைக்கட்டிடமும் திருத்தப்பட்டும் வெறுமையாக இருக்கிறது. இன்னும் அந்தப் பகுதியில் சந்தை முதலிய வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கவில்லை. என்னை தனது சைக்கிளில் ஏற்றிச் சென்ற நண்பன் ஜோன் அந்தப் பகுதியைச் சேர்ந்தவன்.


அந்தப் பகுதியில் அநேகமாக மக்கள் குடியேறிவிட்டார்கள். ஜோனின் வீடு இந்திய மக்களால் வழங்கப்பட்ட பன்னிரண்டு தகரங்களால் வேயப்பட்;டிருந்தது. வீட்டை சுற்றி மண்ணாலும் உருத்திரபுரம் பனை மட்டைகளாலும் அடைக்கப்பட்டுள்ளது. ஜோனின் தெருக்களில் உள்ள அநேகமான வீடுகள் அப்படித்தானிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு வீட்டின் பக்கத்திலும் இடிந்த அல்லது கூரையற்ற நிரந்தர சிமென்ட் வீடுகள் இருக்கின்றன. அங்கு பார்த்த பல கூடாரங்களின் முன்னால் பழைய வீடுகளின் சிதைவுகள் அழியாத காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. வன்னியில் உள்ள பல கிராமங்களைப்போல இந்தக் கிராமமும் தன்னை கூடாரங்களால்தான் அதிகம் அடையாளம் காட்டுகிறது.


செழித்த தென்னை மற்றும் மா மரங்களுக்கு இடையில் எறிகணையால் உயிரிழந்த மரங்களும் முகத்தை காட்டிக் கொண்டு நிற்கின்றன. எனக்கு பல ஞாபகங்களை அந்தத் தெருக்கள் கிளறிக் கொண்டிருந்தன. உருத்திரபுரம் வயல்களும் தெருக்களும் எனக்கு மிகவும் பரீட்சியமானவை. நான் முன்னர் பார்த்த உருத்திரபுரம் இப்பொழுது நிறைய மாறிப் போயிருக்கிறது. உருத்திரபுரம் கூழாவடிக்குச் செல்லும் பொழுது அண்மையில் குடியேறி பாம்பு தீண்டியதனால் மரணித்த சிறுவனின் வெற்றுடல் வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு தூரம் உன்னை பொத்திப் பொத்தி கொண்டு வந்த பிறகு பாம்பு உன்னை தின்று விட்;டதே? என்ற அந்த சிறுவனது தாயின் அழுகை அந்தப் பகுதியை உறைய வைத்திருந்தது. என்னுடன் வந்த அந்தப் பகுதியில் இருக்கிற நண்பன் குணாவின் வீட்டின் முன்பாக யுத்தகால பெரும் பதுங்குகுழி ஒன்று சிதைவுண்ட நிலையில் ஆபத்தான குழியாக இருக்கிறது. உருத்திரபுரம் முழுவதும் விசப்பாம்புகளின் அச்சுறுத்தல் இருக்கின்றன.



உருத்திரபுரம் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட வறுமையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின்; இல்லங்கள் சில முன்பு இயங்கி வந்தன. ஆரோபணம் மற்றும் காந்திநிலையம் என்பன அங்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தெருவால் செல்லும் பொழுது அந்தப் பிள்ளைகளது குரல்கள் பெரியளவில் கேட்கும். அந்த இலத்தில் இருந்து நான் படித்திருக்கிறேன். இப்பொழுது ஆரோபணம் இல்லத்தில் பிள்ளைகளின் குரல்களை கேட்கவில்லை. அங்கு படித்த பல பிள்ளைகள் திக்குத் திசை தெரியாமல் பிரிந்தோடியிருக்கிறார்கள். சிலர் யுத்தத்தில் இறந்திருக்கிறார்கள். பிள்ளைகள் ஓடித்திரிந்த காந்திநிலையம் வளாகம் வெறுமையுடன் இருக்கிறது. காந்திநிலையத்தில் இருந்து எனது சகோதரன் படித்திருக்கிறான். அங்கு செல்லும் பொழுது ஆவலுடன் பார்க்கும் பிள்ளைகளின் முகங்கள் ஞாபகத்தில் நிற்கின்றன. இப்பொழுது ஜெயந்திநகரில் உள்ள குருகுலம் அமைந்திருந்த இடத்தில் காந்திநிலையம் இயங்குகிறது. போரால் வறுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அங்கு படிக்கிறார்கள். உருத்திரபுரம் முறிப்பில் இயங்கிய மகாதேவ ஆச்சிரமத்தை சிறுவர்களும் அங்கு படிக்கிறார்கள்.


உருத்திரபுரம் கூழாவடி என்ற இடத்தை நோக்கிச் சென்ற பொழுது மேலும் பல வெறுமைகளை பார்க்க நேரிட்டது. உருத்திரபுர மக்களுக்கு அது ஒரு சிறிய நகரம். சில கடைகள்ரூபவ் மரக்கறிச்சந்தைரூபவ் மீன்சந்தைரூபவ் முடி திருத்தகங்கள்ரூபவ் சில அலுவலகங்கள் என கூழாவடி மரத்தை சுற்றி அமைந்திருந்தன. இப்பொழுது மீண்டும் சில கடைகள் இயங்க ஆரம்பித்திருக்கின்றன. முன்னால் தெருவை கண்காணிக்கும் மினி காவலரண் ஒன்றும் முளைத்திருக்கிறது. உருத்திரபுரம் பிரதான வீதியால் செல்லும் பொழுது இடப்பக்கமாக செல்லும் ஒவ்வொரு துணை வீதிகளும் மிகப் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றவை. அறுபதுக்கு மேற்பட்ட வருடங்களின் வளர்ச்சியையும் பழமையும் வெளிப்படுத்துமளவில் நீண்டு வளர்ந்த பனைகளும் தென்னைகளும் பரந்து கிளை விரித்திருக்கிற மாமரங்களும் நிறைந்திருக்கின்றன. போரில் இடையிடையே பலியாகிய பனைகளும் தென்னைகளும் இதர மரங்களும் முகத்தை காட்டுகின்றன.


பற்றிமா கிறிஸ்தவ ஆலயம்ரூபவ் மாணிக்கப் பிள்ளையார் கோயில்ரூபவ் எள்ளுக்காட்டு முருகன் கோயில்ரூபவ் லூர்த்கெவி மாதா ஆலயம் என ஆலயங்கள் மிகுந்த உருத்திரபுரம் நெடுகவும் ஆன்மாவைப்போல நடுவில் ஆறு செல்கிறது. கிளிநொச்சி குளத்தில் இருந்து வரும் அந்த ஆறு ஒரு புறமும் முறிப்பு குளத்தின் நீர் மறுபுறமும் உருத்திரபுரம் கிராமத்தை செழிமையுடன் வளர்த்துக் கொண்டிருக்கிறது. உருத்திரபுரம் கிராமத்தின் ஜீவதொழிலாக விவசாயம் விலங்கு வளர்ப்பு முக்கியம் பெறுதவற்கு ஆன்மாவாக இந்த குளங்களின் நீரே உதவுகிறது.


கூழாவடியிலிருந்து பக்கத்தில் உள்ள சிவநகர் பாடசாலைக்குச் சென்றேன். பாடசாலைக்கு செல்லும் முன்பாக என்னுடன் பாடசாலையில் படித்த நண்பன் திருபரனின் வீடு அடையாளம் தெரியாதவாறு உருமாறியிருந்தது. சிவநகர் பாடசாலையடி கடுமையான போர் நடந்த களமுனை என்பதால் பக்கத்தில் உள்ள பல வீடுகள் சிதைந்திருந்தன. பாடசாலையின் பக்கத்தில் உள்ள முன்பள்ளிகள்ரூபவ் அலுவலகங்கள்ரூபவ் பொது மண்டபங்கள் எல்லாம் அழிந்த நிலையில் வீழ்ந்து கிடக்கின்றன. மிதிவெடிகள் விதைக்கப்பட்ட நிலம் என்று சொல்லுமளவில் பார்க்கும் இடமெல்லாம் ‘மிதிவெடிகள் கவனம்’ என்ற வார்த்தைகள் தொங்குகின்றன.


மிதிவெடி அபாயப்பலகைகள் உக்கி உடைந்து போகும் நிலையிலும் அந்தப் பகுதிகளில் மக்கள் பெரியளவில் குடியேறவில்லை. சிவநகரைச் சேர்ந்த பல குடும்பங்கள் வந்து அறிந்த தெரிந்தவர்களின் காணிகளில் கூடாரம் அமைத்திருக்கிறார்கள். அந்த தெருவின் தொடக்கத்தில் ஒரு காணியில் கூடாரத்தை நட்டு ஒரு குடும்பம் இருந்ததது. அபாய முற்றத்தில் குழந்தைகள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிவநகரைச் சேர்ந்தவர்கள். தங்கள் காணிகளுக்கு மிதிவெடி அபாயம் காரணமாக இன்னும் குடியிருக்க அனுமதிக்காத காரணத்தினால் அந்தக் காணியில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறார்கள். அப்படி பல குடும்பங்களைப் பார்த்தேன்.


சனங்களறற்ற பல காணிகளை தாண்டிச் சென்ற பொழுது ஒரு குடி ஆற்றங்கரை ஒன்றின் பக்கத்தில் தங்கள் காணியில் உள்ள தென்னைகளில் விழுந்த ஓலைகளை பின்னி அழகான வீடு ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார்கள். வயதான தாய் ஓலைகளை பின்னிக் கொண்டிருக்கிறார். பழைய வீடு இடிந்தபடி அப்படியே பக்கத்தில் இருக்கிறது. குழந்தையும் தாயும் மண்ணெடுத்து வந்து வீட்டிற்கு கொட்டுகிறார்கள். அழகான மண் அடுப்பு ஒன்றை அமைத்திருக்கிற அந்த குடியைச் சேர்ந்த மூதாட்டி இந்த நிழலில் வந்து கிடக்க எத்தனை இடர்களுக்கு முகம் கொடுத்தோம் என பெரு மூச்செறிகிறார்.


சிவநகர் பாடசாலை முற்றாக அழிந்து போயிருக்கிறது. பாடசாலை மண்டபங்களை எறிகணைகளும் துப்பாக்கிச் சன்னங்களும் துளைத்து ஓட்டையிட்டிருக்கின்றன. அந்தப் பாடசாலை அழகான ஒரு சோலையைப்போலிருந்ததை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பாடசாலை பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக அந்தப்பாடசாலைக்கு யுத்தம் நடைபெற முன்னர் போயிருந்தேன். பிள்ளைகள் படிப்பதற்கு இயல்பான அழகான சூழல் தேவை என்று குறிப்பிட்ட அன்றைய அதிபர் திரு. மனோகரன் பாடசாலையை பிள்ளைகளுக்குரிய பாடசாலையாக மாற்றுவதற்காக கடுமையாக உழைத்தார். நகரத்திற்கு மிகவும் தூரத்தில் உள்ள அந்தக் கிராமத்தில் குறிப்பாக சிறுவர்களுக்குரிய சிறந்த பாடசாலையாக அது திகழ்ந்திருந்தது. பிள்ளைநேயப் பாடசாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற அந்தப் பாடசாலையின் மென்மையுடன் வரையப்பட்ட நீல நிற எழுத்துக்களை எறிகணைகளும் துப்பாக்கிச் சன்னங்களும் துளைத்திருக்கின்றன.


பாடசாலையின் பெயர்ப்பலகை வீழ்ந்து கிடக்கிறது. ‘எமது நாடு தமிழீழம்;;’ என்ற வாசகம் மற்றும்


பிள்ளைகள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்ட பூங்கா பேயடித்த இடத்தைப்போல பாழடைந்து அச்சமூட்டும் காடாக மாறியிருக்கிறது. மரங்கள்ரூபவ் சுவர்கள்ரூபவ் நிலம் எல்லாமே சிதைந்திருக்கின்றன. பேரழிவின் எச்சமாக இருக்கும் அந்தப் பாடசாலையின் பக்கத்தில் மிதிவெடிகளின் நிலம் என்கிற அளவில் பதாகைகளும் யுத்தகால மண்மேடுகளும் நிறைந்திருக்கின்றன. சிவநகரில் கடுமையான சமர் நடந்தது என்பதை சிவநகர் பாடசாலையின் அருகாக பாடசாலை வீதியை ஊடறுத்துச் செல்லும் மண்மேடு சொல்லுகிறது. மண்மேடுகளோ வீடுகளை மூடியபடி வீட்டுக்கு மேலே தெரிகிறது.


இப்பொழுது சிவகர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களும் கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் படிப்பதாக அந்தப் பாடசாலையின் அதிபர் திருமதி மீனா இதயசிவதாஸ் என்னிடம் குறிப்பிட்டார். நம்பிக்கையுடன் உருத்திரபுரம் பிரதேசத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை கற்பிக்க வேண்டும் என்று மீளக்குடியேறியிருக்கிற அவர் பாடசாலை மாணவர்கள் கல்வியை கற்க மிகுந்த விருப்பத்துடன் இருந்த பொழுதும் அதற்கான வளங்கள் இல்லை என்கிறார். உருத்திரபுரம் மக்கள் விரைவில் மீண்டெழும் திடம் கொண்டவர்கள் என்று அவர் சொல்லுவதை நான் பல இடங்களில் பார்த்தேன். எள்ளுக்காடு போன்ற சில இடங்கள் வறுமையும் போரின் தாக்கமும் மிக்க கிராமங்கள் என்று அவர் குறிப்பிட்டார். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்படடிருப்பதை பாடசாலையில் அவதானித்தாகவும் அதிபர் திருமதி மீனா இதயசிவதாஸ் சொல்கிறார்.


உருத்திரபுரம் பாடசாலை 1996இல் சத்ஜெய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மணியங்குளத்தில் இங்கியது. அந்தப் பாடசாலை உருத்திரபுரத்திற்கு திரும்பும்வரை தரம் எட்டிலிருந்து அங்கு படித்திருந்தேன். கல்விரூபவ் விளையாட்டு என்று சாதிக்க நினைக்கும் ஒரு சூழலைத்தான் அந்தப் பாடசாலை இடம்பெயர்ந்த நிலையிலும் கொண்டிருந்தது. போரால் இடம்பெயர்ந்த பல பிள்ளைகள் அந்தப் பாடசாலையில் படித்திருக்கிறார்கள். மாணவர்களின் மனங்களை புரிந்து சரியான முறையில் கல்வியை அந்தப் பாடசாலை வழங்கியதை நான் அனுபவ பூர்வமாக  உணர்ந்திருக்கிறேன். இன்று மீண்டும் சிதைவடைந்து உருக்குலைந்த நிலையில் அந்தப் பாடசாலை தனது கல்வி நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறது. மின்சார வசதியற்ற நிலையில் வீடுகளில் இரவில் படிக்கும் பரீட்சையை எதிர்கொள்ளும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு ஜெனரேட்டர் தேவைப்படுவதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார். அப்படியொரு உதவி கிடைத்தால் அந்த மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற அது மிக உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


அடுத்து உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு சென்றேன். உருத்திரபுரீச்சரம் என்ற அந்த ஆலயம்தான் உருத்திரபுரம் என்ற பெயர் அந்தக் கிராமத்திற்கு ஏற்பட்டமைக்கு காரணம்.


இப்பொழுதுள்ள அந்த ஆலயத்தின் முன்பாக உள்ள திட்டு ஒன்றே முன்பு ஆலயமாக இருந்தமைக்கான தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்தும் ஆய்வுகளை செய்ய அந்தப் பகுதியில் உள்ள நாகபாம்பு விட வில்லை என்றும் அதனால் அந்த ஆய்வு தடைப்பட்டதாக சொல்லப்படுகிறது. பக்கத்தில் தாமரை மலர்கள் நிறைந்த சிவநகர் குளம் இருக்கிறது. குளத்திற்குச் செல்லும் வழியின் முன்பக்கத்தில் இராணுவ காவலரண் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அந்தக் குளத்தில் மீன் பிடிப்பவர்கள் யாரையும் காணவில்லை. மருத மரங்கள் நிறைந்த அந்தக் குளத்தங்கரை அதனை தொடர்ந்து வருகிற ஆறு மணல் வெளி எல்லாம் மனதை குளிரச் செய்யும் காட்சிகளைக் கொண்ட இடங்கள். குளத்தங்கரையில் சிலதூரத்திற்கு அப்பால் செல்ல முடியவில்லை. மக்கள் குடியேறாத அந்தப் பகுதிகள் அச்சம் தரும் வழியினைப்போல நீண்டு செல்லுகிறது.


பொறிக்கடவை ஆலயத்திற்கு சென்றேன். கோயிலின் முன்பாக சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் அரிவு வெட்டப் போய் விட்டார்கள் என்று சொல்லும் அந்தக் குழந்தைகள் கோயிலுக்குப் பக்கத்தில் அமைத்திருக்கிற தங்கள் கூடாரத்தை காட்டினார்கள். 90 வயதான தாத்தாவும் 85 வயதான பாட்டியும் கூடாரத்தின் முன்னால் இருந்தார்கள். இனக்கலவரம் காரணமாக 1950களில் அவர்கள் அந்தப் பகுதியில் குடியேறியதாக என்னிடம் குறிப்பிட்டார்கள். சிவநகரில் பார்த்த மண் அணை பொறிக்கடவை அம்மன் ஆலயத்தின் பின் பக்கமாக பூநகரியை நோக்கி நீண்டு செல்லுகிறது. அந்த மண் அணைக்கு அப்பால்தால் எங்கள் காணி இருக்கிறது. இன்னும் எங்களை அங்கு விடவில்லை. அதனால்தான் இங்கு இந்த தரப்பாலை கட்டிக்கொண்டு இருக்கிறோம் என அந்தப் பாட்டி சொன்னார். பழைய பொம்மை ஒன்றையும் உடைந்து சக்கரங்களற்ற சைக்கிளையும் வைத்து அந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


அந்த மண்மேட்டிற்கு பின்னால் நீவில் போன்ற உருத்திரபுரத்தை சேர்ந்த கிராமங்கள் உள்ளன. பொறிக்கடவை அம்மன் ஆலயத்தின் வளாகத்தில் ஒரு பகுதி உருத்திரபுரத்தையும் மற்றைய பகுதி குஞ்சுப்பரந்தன் பகுதியையும் சேர்ந்தது. அந்தப் பகுதி முழுக்க வயல்வெளிகள்தான் விரிந்து செல்கின்றன. உருத்திரபுரம் கூழாவடியிலிருந்து பொறிக்கடவை நோக்கி வரும் பொழுது பரந்த வயல்கள் விளை நிலங்களாக நம்பிக்கை தருகின்றன. சிறிய பாலங்களும் வாய்க்கால் கரைகளும் யுத்த கால மறைவிடங்களாக பாவிக்கப்பட்டு பதுங்கு குழிகளாகவும் மண்முட்டைகள் அடுக்கப்பட்டும் கிடக்கின்றன.


சிறிய வயதில் பொறிக்கடவை அம்மன் கோயில் பற்றிய கதையை அம்மம்மா சொல்லிய ஞாபகமும் அழிந்து கொண்டு போகிறது. அந்தப் பகுதியில் உள்ள வயல்களை ஒரு யானை வந்து நாசப்படுத்துவதால் வெள்ளைக்காரர்கள் அந்த யானைக்கு பொறி வைத்தார்கள். அந்தப் பொறியில் சிக்கிய யானையை அந்த அம்பாள் மீட்டதாகவும் பக்கத்தில் உள்ள மரத்தின் கீழ் அம்பாளின் உருவம் இருந்தாகவும் அம்மம்மா சொன்னார். அதனால்தான் பொறிக்கடவை என்று அந்த ஆலயம் உள்ள இடத்தையும் பொறிக்கடவை அம்மன் என்று அந்த கடவுளையும் அழைப்பதாக அம்மம்மா சொல்லியிருந்தார். அந்த ஆலய முகப்பில் இந்தக் கதையை நினைவு கூரும் விதமான ஓவியமே வரையப்பட்டுள்ளது. பொறியில் அகப்பட்ட யானையும் மரத்தின் கீழுள்ள அம்மனும் வெள்ளைக்காரர்களும் அந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ளனர்.


உருத்திரபுரத்திற்கு வடக்காக பொறிக்கடவைக்கு முன்பக்கத்தில் எள்ளுக்காடு இருக்கிறது. ஒரு சில நிரந்தர சீமென்ட் வீடுகள் மட்டும் இருந்த அந்தக் கிராமத்தில் பழைய மண் வீடுகள் உடைந்து சரிந்திருக்கின்றன. இப்பொழுது கூடாரங்களில் மக்கள் குடியிருக்கிறார்கள். ஒரே ஒரு விரலை தவிர மிகுதி எல்லா விரல்களும் உதிர்ந்துபோன கையை தலையில் வைத்து யார் வாரது? என்று பார்க்கும் நாகலட்சுமி என்ற ஒரு தாய்தான் அந்தக் கிராமத்தில் முதலில் என்னை வரவேற்றார். வறுமை நோய் என்று சொல்லுவதைப்போல வறுமை பீடித்து வாடிப் போயிருக்கும் அவர்கள் உடைந்த மண் வீட்டில் தரப்பாலை போட்டு குடியேறியிருக்கிறார்கள். வாடிப்போயிருக்கும் முகங்களுடன் குழந்தைகள் வந்து ஆவலுடன் சூழ்ந்து கொண்டார்கள்.


இரண்டு கால்களையும் இழந்த கணவன் பழைய சக்கர நாற்காலியில் இருக்கிறார். இரண்டு பிள்ளைகள் வறுமை காரணமாக படிப்பை விட்டு விட்டார்கள். ஒரு மகன் அப்பாவை வண்டிலில் வைத்து தள்ளிக் கொண்டு போகிறான். அவன் படிக்கப் போறதில்லையா? என்று கேட்ட பொழுது இந்தப் பிள்ளைகளே படிக்க பெரும்பாடு படுகிறார்கள் என்று அந்தத் தாய் விரக்கியுடன் சொன்னார். ஆனால் மூன்று பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் செல்லுவது மிகப் பெரிய போராட்டமாகி விடுகிறது என்றும் அவர் சொன்னார். பிள்ளைகளை சரியாக பார்க்க வேண்டிய நிலையில் படிப்பிக்க வேண்டிய கடமை இருக்கிற நிலையில் எனது பிள்ளை என்னை தள்ளிச் செல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டேன் என தங்கராசா மனம் நொந்து சொன்னார்.


எள்ளுக்காட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் குடமுருட்டிக் கடலில் சென்று மீன் பிடித்து தங்கள் பிழைப்பை நடத்துபவர்கள். தன் பிள்ளைகள் எல்லாவற்றையும் யுத்தம் தின்று விட்டதாக சொல்லும் இன்னொரு தாயையும் அந்தப் பகுதியில் சந்தித்தேன். வளர்ந்த பிள்ளைகள்ரூபவ் ஒருவர் தடுப்பில் மற்ற இருவர் யுத்தத்தில் காணாமல் போய் விட்டார்கள். உங்கள் பிள்ளைகள் யுத்தத்தில் இறந்ததாக யாரோ சொன்னார்களே என்ற பொழுது அப்படிச் சொல்லாதீர்கள். அவர்கள் காணாமல் போயிருக்கிறார்களே தவிர இறக்கவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று அவர் கண்ணீருடன் உறுதியாக சொல்கிறார். யுத்தம் கடுமையாக காயப்படுத்திய அந்தப் பகுதி மக்களில் பலர் நிரந்தரமாக வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள். இப்பொழுது ஒன்றுமற்றவர்கள் என்பதைப்போல மீள அந்தக் கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். எள்ளுக்காட்டைப்போல யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல மக்கள் உருத்திரபுரம் கிராமத்தின் எல்லைப் பகுதிகளில் இருப்பதாக சொல்கிறார்கள்.


மனம் மிகவும் வலிக்க வைக்கும் வார்த்தைகளையும் முகத்தையும் பார்க்கும் பொழுது எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் நாம் இருக்கிறோம் என்பதும் நம் காலத்து துயரத்தை எப்படி துடைப்போம் என்பதும் குற்ற உணர்வுகளாக தைக்கின்றன. இப்படியும்


உருத்திரபுரம் நெல் விளையும் தேங்காங்காய்கள் விளையும் பூமி. அந்த விளை நிலத்தின் வளம் எள்ளுக்காட்டு மக்களின் வாழ்வில் செழிப்பை கொண்டு வர வேண்டும். அந்த கிராமத்திலே உள்ள ஒரு பகுதி மக்களின் வறுமையை துயரை துடைக்க இனி வரும் காலங்களில் உரத்திரபுரம் கிராமத்தின் வளமும் செழிமையும் உதவ வேண்டும். எள்ளுக்காட்டுக் குழந்தைகள் கல்வியில் முன்னேற மிகுந்த ஆர்வம் காட்டுவதாக உருத்திரபுரம் பாடசாலை அதிபர் சொன்னார். அந்தப் பிள்ளைகள் கல்வியில் முன்னேற பாடசாலையின் சமூகமும் உருத்திரபுரம் மக்களும் உதவ வேண்டும். எளிதில் வென்று இயல்பான வாழ்க்கையை பற்றிக் கொள்ளும் உறுதி மிக்க மக்கள் உருத்திரபுரம் மக்கள். அந்த மக்களின் உழைப்பு முழு  


தீபச்செல்வன்


  


12 September 2010

உருத்திரபுரம் நாட்குறிப்பு 2

2 கருத்துக்கள்

முந்தய பதிவுகள். 
குறிப்பு 1
அச்சந்தியிலிருந்து(கூழாவடி) மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும்.அச்சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும். தற்போது அவ்வீதி நீவில் என்ற கிராமத்தினூடாகவே செல்கின்றது. ஆரம்பத்தில் அப்பாதையின் இருமருங்கும் அடர்ந்த காடாகவும் வண்டில் மாட்டுப் பாதையொன்றும்தான் இருந்தது. ஐம்பது அடி உயரத்திற்கும் மேற்பட்ட வீரமரம், பாலைமரம் மற்றும் பலவகை மரங்கள் சூழ்ந்த காட்டினூடாகவே அப்பாதையால் பயணிக்கவேண்டும். மந்திக் குரங்குகளின் முறட்டுச சத்தமும் அங்குமிங்கும் தாவும் இரைச்சலும் பயத்தில் மயிர் சிலிர்க்க வைக்கும்.

அங்குதான் முக்கியானதும், எங்கள் கிராமத்திற்கு இப்பெயர் வரக்காரணமாயுமிருக்கும் உருத்திரபுரீஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் அதாவது ஐம்பதாம் ஆண்டுகளில் அப்பிரதேசத்தில் செங்கற்களாலான இடிபாடு ஒன்று திரு வேலாயுதசாமி அவர்களால் கண்டறியப்பட்டது. பின்பு ஊர்ப்பெரியவரக்ளும் இணைந்து தோண்டிப்பார்த்து அவ்விடம் புராதன சிவன்கோவிலின் சிதைவுகள்தான் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டது. முதலில் திரு வேலாயுதசாமியார் அவர்களால் அப்பகுதியில் சிறு குடிசையொன்றில் உருவாக்கி;, மூலஸ்த்தானத்தில் வேல் மட்டுமேயிருந்த முருகன் ஆலயம் மட்டுமே அவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. என் சிறுவயதில் மாலை நேரங்களில பயமூட்டக்கூடிய சூழலில்தான் நான் அவ்விடத்தைப் பார்த்திருக்கின்றேன்; ஆனாலும் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திருந்தும் பக்கதர்கள் வருகை தருவதையம் நான் பார்த்திருக்கின்றேன். கோவிலுக்கருகிலுள்ள தாமரைப்பூக்கள் சூழ்ந்த குளம் கோவிலுக்கான சுற்றாடலை இயற்கையாவே அளித்திருப்தைக்காணும்போது பண்டையகாலத்தின் அச்சூழலைக் கற்பனையில் காணலாம். அத்திருத்தலத்தின் பெருமையினாலேயே எமது கிராமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

அக்காலத்தில் கூழாவடியில் எவ்விதமான வியாபாரநிலையமும் கிடையாது. சங்கக்கடை மட்டுமேயிருந்தது. மேலே குறிபபிட்ட பாடசாலையும் கொலனி நிர்வாகஸ்த்தவரின் (Colony Officer) வாசஸ்த்தலமுமே இருந்தன. சந்தியில் கூழாவுக்குப்பக்கத்தில் இருந்த ஆத்தி மரத்தடியில் அடுப்பேற்றி வெந்நீர்வைத்து அதில் தேநீர் தயாரித்து விற்பனை செய்து வந்தார் இரண்டாம் வீட்டு ஆச்சி என்பவர். 1958ம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் காட்டுமரங்களாலும் தென்னங்கிடுகினாலும் அமைத்த கடைதான் கூழாவடியில் முதன்முதல் உருவான தனியார் வர்த்தக நிலையமாகும்.  

தொடரும்...

திரு: க.கயிலாயநாதன்

09 September 2010

உருத்திரபுரம் நாட்குறிப்பு 1

0 கருத்துக்கள்


யாழ்ப்பாணம் கண்டி வீதியில் கிளிநொச்சி நகருக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ளதே உருத்திபுரம் கிராமம். இது 1948-1950 ம் ஆண்டுகளில் அரசினால். ஏற்படுத்தப்பட்ட குடியேற்றறத் திட்டமாகும். வடமாகாணத்தின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டும், அதேவேளை அக்காலத்தில் வன்னிப்பகுதிக்குக் குடிபெயர்ந்து வாழ விருப்பமும் கொண்டவரகளையே குடியேற்றினர். அவ்வாறு குடியேற வந்தவர்களுக்கு குடியிருக்க வீடு, கிணறு, தேவையான விவசாய உபமரணங்கள் சிலவும் கொடுத்தே குடியேற்றினர். அக்காலத்தில் காடாகவும் எவ்வித வசதிகளுமற்ற நிலையிலுமே எமது முன்னைய தலைமுறை எமக்காகத் தம்மை அர்ப்பணித்தனர். இதற்கு முன்னனர் கிளிநொச்சி நகருக்கு மேற்கே கணேசபுரம் கிராமம் குடியேற்றப்பட்டு விட்டது. அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் கால்நடையாவே கிளிநொச்சிவரை சென்று வரவேண்டும். துவிச்சக்கர வண்டி, மாட்டுவண்டி வசதியிருந்தவர்கள் அதனைப்பாவித்தனர். பின்பு ஒரு நாளைக்கு இரண்டு தரம் மட்டுமே பேருந்து சேவை நடைமுறைக்கு வந்தது. அது யாழ்ப்பாணத்திலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டுப் பத்து மணிக்கு ஒன்றும், மாலை இரண்டு மணிக்கு மற்றொண்றுமான சேவைமட்டுமே..
கிளிநொச்சியிலிருந்து நடந்து உருத்திரபுரம் வருபவர்கள் கணேசபுரம் (பழையகொலனி) ஊடாக நடந்து தற்போது இருக்கும் இந்துக் கல்லூரியின் கிழக்கே காடாக இருந்த பகுதியூடாகக் குறுக்கறுத்து கரடிப்போககு- உருத்திரபுரம் பிரதான வீதியை அடைந்து பின்னர் நடப்பர்.

ஆரம்பத்தில் பாடசாலை
ஆரம்பத்தில் (கூழாவடியென்று இப்போது குறிப்பிடப்படும்) உருத்திரபுரம் குஞ்சுப்பரந்தன் வீதிகள் சந்திக்கும் பகுதியில் ஓலைக்குடிசையாக ஆரம்பிக்கப் பட்டு மதிப்பிற்குரிய திரு கதிரவேலு வாத்த்தியார் அவர்களால் நடத்தப்பட்ட ஒனறேயொன்றுதான் பாடசாலையாகும்.

தொடரும்...

திரு: க.கயிலாயநாதன்

உங்கள் கருத்துகளை கட்டாயம் பகிருங்கள்.
எமது மின்னஞ்சல் duruthirapuram@gmail.com